உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 29 July 2018 12:32 PM IST (Updated: 29 July 2018 12:32 PM IST)
t-max-icont-min-icon

முப்பது வயதான அவள், தனது இரண்டு வயது குழந்தையுடன் தோழியின் வீட்டில் வந்து தங்கியிருக்கிறாள்.

முப்பது வயதான அவள், தனது இரண்டு வயது குழந்தையுடன் தோழியின் வீட்டில் வந்து தங்கியிருக்கிறாள். தோழியின் கணவர் வெளிநாட்டில் வேலைபார்ப்பதால், அவளால் அங்கு ஓரளவு நிம்மதியாக தங்கியிருக்க முடிகிறது. மீண்டும் அவள் கணவர் வீட்டிற்கோ, தாய் வீட்டிற்கோ திரும்பிச் செல்ல விரும்பாததால், தோழியின் வீட்டின் மாடியிலே தான் கற்ற அழகுக் கலையை நம்பி சிறிய அளவில் பியூட்டி பார்லர் ஒன்றை அமைத்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்.

இளம் பெண்கள் திருமணத்திற்கு முன்பு எல்லைமீறினால் அவர்கள் வாழ்க்கை எதிர்காலத்தில் எப்படி எல்லாம் சிக்கலுக்குள்ளாகும் என்பதற்கு இவள் ஒரு எடுத்துக்காட்டு. தனது கண்ணீர் கதையை அவளே சொல்கிறாள்..

“எனது சொந்த ஊரில் நான் பிரபலமான பியூட்டிசியனாக இருந்தேன். நான் அழகாக இருப்பது என் தொழிலுக்கு நன்றாக கைகொடுத்தது. எங்கள் வீடு அமைந்திருந்த சுற்றுவட்டாரப் பகுதியில் மணப்பெண் அலங்காரம் என்றாலே என்னைத்தான் அழைப்பார்கள். நிறைய சம்பாதித்து நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்தேன்.

நான்கு வருடங்களுக்கு முன்பு மணப்பெண் அலங்காரத்திற்காக கல்யாண மண்டபம் ஒன்றிற்கு சென்றிருந்தபோதுதான் என் கணவரை சந்தித்தேன். முதலில் நட்புடன் பழகினோம். பின்பு காதலித்தோம். அவர் என்னை திருமணம் செய்துகொள்ள தீவிரம் காட்டியதால், நெருங்கிப் பழகினோம்.

திருமணத்தை பற்றி என் வீட்டில் பேசியபோது கடுமையாக எதிர்த்தார்கள். அவரை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்றார்கள். ஆனால் என் கணவரின் குடும்பத்தினர் எதிர்க்கவில்லை. அவர்கள் எங்கள் திருமணத்திற்கு ஆதரவாக இருந்ததால், எளிமையாக திருமணத்தை நடத்திவைத்தார்கள். உடனே என் பெற்றோர் என்னை தலைமுழுகிவிட்டார்கள். மிக மகிழ்ச்சியாக எங்கள் மணவாழ்க்கை தொடங்கியது. என் கணவரின் அம்மா உயிருடன் இல்லை. அப்பாவும், திருமணமான அக்காளும் இருக்கிறார்கள். மாமனார் என் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார்.

நான் குழந்தை பெற்றதும், என் வாழ்க்கையே தலைகீழாகிவிட்டது. திருமணமான ஏழாவது மாதமே நான் பிரசவித்தேன். அதற்கு காரணம், நாங்கள் காதலித்துக்கொண்டிருந்தபோதே உடலுறவு வைத்துக்கொண்டோம். அதனால் திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பிணியாகியிருந்தேன். அந்த ரகசியம் என் கணவருக்கு மட்டுமே தெரியும். அதுவரை என் மீது அளவுக்கு அதிகமாக பாசம் செலுத்திய மாமனார், அதன் பின்பு என்னை தரக்குறைவான பெண்ணாக கருதத் தொடங்கிவிட்டார். நான் வேறு யார் மூலமோ கர்ப்பிணியாகி, அழகால் என் கணவரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டேன் என்று நினைத்து என்னை கேவலமாக பேசினார். நான் அதை என் கணவரிடம் சொன்னேன். அவராலும் வெளிப்படையாக உண்மையை ேபச முடியவில்லை. ஆனாலும் எனக்கு ஆதரவாகவே முதலில் நடந்துகொண்டார். அதனால் மாமனாருக்கு என் மீது கோபம் அதிகரித்தது.

இந்த நிலையில் என் கணவர் சில மாதங்கள் வேலை தொடர்பாக வெளிநாடு சென்றார். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள இளைஞன் ஒருவனுக்கும், எனக்கும் இருந்த நட்பை கொச்சைப்படுத்தி, கள்ளக்காதல் என்று என் மாமனார் கூறினார். அதை என் நாத்தனாரும் நம்பி, என் கணவருக்கு தகவல் சொன்னார்கள். எப்படியோ எல்லோரும் சேர்ந்து என் கணவர் மனதை மாற்றிவிட்டார்கள். என்னை மோசமானவள் என்ற முத்திரையை குத்திவிட்டார்கள்.

கணவரே சந்தேகப்பட்டுவிட்டார். அவர் சந்தேகத்தை எப்படி தீர்த்துவைப்பது என்று எனக்கு தெரிய வில்லை. திருமணத்திற்கு முன்பே நான் என் கணவருக்கு இணங்கிவிட்டதால்தான் இத்தனை அவமானமும் என்னை வந்து சேர்ந்துவிட்டது. இனியும் அவரோடு சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை. என் பெற்றோரும் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இப்படியே என் வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறேன்” என்று கண்கலங்க சொல்கிறாள். குழந்தை அவள் கையில் இருந்து கள்ளங்கபடமின்றி சிரித்துக்கொண்டிருக்கிறது.

காதலிக்கிறீர்களா..? ஓகே! அதுக்குமேல் ‘இடம் கொடுத்து’ எதிர்காலத்தை இப்படி கேள்விக்குறியாக்கிடாதீங்க..!

- உஷாரு வரும்.

Next Story