சீறிப்பாயும் செல்ல கிடாக்கள் ஆவேசமாக மோதி அதிரடியாய் பரிசுகளை குவிக்கின்றன


சீறிப்பாயும் செல்ல கிடாக்கள் ஆவேசமாக மோதி அதிரடியாய் பரிசுகளை குவிக்கின்றன
x
தினத்தந்தி 29 July 2018 12:40 PM IST (Updated: 29 July 2018 12:40 PM IST)
t-max-icont-min-icon

கால்நடைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதோடு அவைகளை சக உறவாகவே பாவித்து பாசத்தை பொழிபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.

கால்நடைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதோடு அவைகளை சக உறவாகவே பாவித்து பாசத்தை பொழிபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவைகளின் வீர தீரத்திற்கும், உழைப்புக்கும் தக்க சமயத்தில் மரியாதை கொடுத்து பெருமைப்படுத்தவும் செய்கிறார்கள். அவைகளின் பாரம்பரியத்தை காக்கும் முனைப்போடு அவைகளுக்கு போட்டிகளை நடத்தி கவுரவிக்கும் வழக்கம் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை வரிசையில் ஆட்டு கிடா சண்டையும் பிரபலமானது. இதற்கு ‘கிடா முட்டு போட்டி’ என்ற அடைமொழியும் உண்டு. பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் உரிய அனுமதி பெற்று கிடா சண்டை போட்டி அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் சமீபத்தில் கிடா சண்டை நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 150 கிடாக்கள் பங்கேற்றன. உரிமையாளர்கள் குரல் கொடுத்ததும் போட்டி தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்து, எதிரெதிரே நின்றுகொண்டிருந்த இரண்டு கிடாக்களும் சீறிப்பாய்ந்து ஒன்றோடு ஒன்று முட்டி மோதின. அதுவரையில் சாந்தமாக காட்சியளித்த கிடாக்கள் மைதானத்தில் புழுதி பறக்க ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

மைதானத்தில் உயிரைக் கொடுத்து போராடும் எல்லா கிடாக் களுமே வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்ந்து கொண்டிருப் பவைதான். வீட்டில், அங்குள்ளவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு அமைதியுடன் உலா வருகின்றன. அவைகளை போட்டிகளுக்கு பழக்கப்படுத்துவதற்காகவே தனிக்கவனம் செலுத்தி வளர்க்கிறார்கள்.

ஆடுகளில் இருந்து இந்த கிடாக்கள் எப்படி மாறுபடுகிறது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அவை எப்படி வளர்க்கப்படுகின்றன? போட்டிக்கு எப்படி கிடாக்களை தயார் செய்கிறார்கள் என்பது போன்ற தகவல்களை அறிய திண்டுக்கல் குடைப் பாறைபட்டியை சேர்ந்த ஆர்.சுரேஷ் என்பவரை சந்தித்தோம்.

இவர் கிடாக்கள் வளர்ப்பதற்காகவே வீட்டில் தனியாக ‘ஷெட்’ அமைத்திருக்கிறார். ஒவ்வொரு கிடாவுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கிறார். ‘சக்தி’ என்று அவர் குரல் கொடுத்ததும் கழுத்தில் நீண்ட முடிகளுடன் இருந்த கிடா ஒன்று, சிங்கம் போன்று சிலிர்த்து எழுந்து நின்றது.. இன்னொரு கிடாவுக்கு தனது பெயரையே சூட்டியிருக்கிறார். மனைவி அனுபிரியாவுடன் சேர்ந்து செல்லமாக வளர்க்கும் கிடாக்களுக்கு தீவனம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரிடம் கிடா வளர்ப்பு குறித்து உரையாடினோம்.

சண்டை கிடா வளர்ப்பதற்கு ஏதுவாக, ஆடு குட்டியாக இருக்கும் போதே எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்?

‘‘செம்மறி ஆடுகளில் பல இனம் உள்ளது. அதில் நாடு, குரும்பை, எட்டயபுரம், மயிலம்பாடி, கொங்கு ஆகியவை தைரியம் நிறைந்தவை. நாட்டு செம்மறி கிடாவுக்கு கோபம் அதிகம். அந்த வகை செம்மறி கிடாவை தான் அதிகம் தேர்வு செய்வோம். 3 மாத குட்டியாக இருக்கும்போதே விலைக்கு வாங்கி வந்து வளர்க்க தொடங்குவோம். குட்டையான நெற்றி, பருமனாக கொம்பு வளர்வதற்கான அறிகுறி, நீண்டவால், உறுதியான தாடை இருக்க வேண்டும். இந்த அம்சங்கள் இருந்தால் கிடா வளர்ந்ததும் பார்க்கவே கம்பீரமாக இருக்கும். இந்த கணிப்பு எப்போதாவது தவறி விடுவது உண்டு. அப்படிப்பட்ட கிடாவை விற்றுவிடுவோம்’’

கிடா வளர்ப்பில் எப்படி தனிகவனம் செலுத்துகிறீர்கள்?

‘‘கிடா கம்பீரமாக வளர்வதற்காக அகத்திக்கீரை, பசும்புல், கொள்ளு, சோளம் ஆகியவற்றை உணவாக கொடுப்போம். நாம் சாப்பிடுவது போன்று தினமும் 3 வேளையும் சரிவிகிதத்தில் தீவனம் கொடுக்க வேண்டும். அப்போது தான் கிடா திடகாத்திரமாக வளரும். பொதுவாக சண்டை கிடாவை தனியாக கட்டிவைத்து வளர்ப்போம். அவைகளை மற்ற ஆடுகளுடன் சேர்ப்பது இல்லை. போட்டி நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே தகவல் கொடுத்து விடுவார்கள். அது முதல் தினமும் கொடுக்கும் உணவுடன் பால், பருத்தி பால் ஆகியவற்றை கூடுதலாக கொடுப்போம். மேலும் தினமும் 5 கி.மீ. நடைப் பயிற்சி, கிணற்றில் நீச்சல் பயிற்சியும் அளிப்போம். இதனால் கிடா போட்டியின்போது சோர்ந்து போகாமல் இருக்கும்’’

கிடா போட்டி சண்டை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை கூறுங்கள்?

‘‘மைதானத்துக்கு அழைத்து சென்றதும் எனது கிடா போட்டிக்கு தயாராகிவிடும். எதிரே நிற்கும் கிடாவை பார்த்ததும், ஆவேசமாகி சீற தொடங்கும். நான் ‘இறங்குடா’ என்றதும் வேகமெடுக்கும். அடுத்து ‘அடிடா’ என்று குரல் கொடுத்ததும், எதிர் கிடாவை பயங்கரமாக முட்டும். கிடாக்களின் மோதலை பார்க்க பார்க்க ஆர்வம் அதிகமாகி நாமும் ஆவேசமாகி விடுவோம். நாம் கொடுக்கும் குரல் கிடாவுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும். தொடர்ந்து குரல் கொடுத்துகொண்டே இருக்கும் வரை முட்டிக் கொண்டே இருக்கும். சில கிடா காயம் அடைந்தாலும் பின்வாங்காமல் மோதும். சில நொடிகளில் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வெற்றிபெற்று விடுவதும் உண்டு. முன்பு 50 முறை கிடா முட்ட வேண்டும் என்பது பந்தயமாக இருந்தது. தற்போது 60 முட்டு முட்ட வேண்டும் என்று மாற்றி உள்ளனர். அந்த இலக்கை நெருங்கும் வரை இரண்டு கிடாக்களும் முட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே ஒரு கிடா விலகி விட்டால் அதை தோற்றதாக அறிவிப்பார்கள். இரண்டு கிடாக்களும் 60 முட்டு களையும் முட்டி விட்டால், சரியான ஜோடி என்று அறிவித்து அவைகளுக்கு சரிசமமாக பரிசு வழங்குவார்கள்’’

ஒரு கிடா எத்தனை போட்டிகளில் பங்கேற்கும்?

பொதுவாக மூன்று மாதத்துக்கு ஒருமுறை கிடாவை போட்டியில் பங்கேற்க வைப்போம். ஒரு போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே மோத விடுவோம். ஏனெனில், சண்டையிடும்போது கிடாவுக்கு தலையில் சில நேரம் ரத்தக்கட்டு ஏற்படலாம். அதை கவனிக்காமல் விட்டால் ஆபத்தாகி விடும். போட்டி முடிந்ததும் கிடாவுக்கு தலையில் உப்பு, வெந்நீர், தவிடு போன்றவை கொண்டு ஒத்தடம் கொடுப்போம். பிறகு தேவையான மருத்துவ சிகிச்சை அளிப்போம். தொடர்ந்து மூன்று மாதங்கள் நன்றாக பராமரித்த பின்னரே அடுத்த போட்டியில் களம் இறக்குவோம். கிடாவை பொறுத்தவரை அதன் கொம்பு தான் பலம். அது உறுதியாக இருக்கிறதா? என்பதை கண்காணித்து வருவோம். கொம்பு உறுதித்தன்மையை இழப்பது தெரிந்தால் போட்டியில் இறக்க மாட்டோம்’’

போட்டிகளுக்காக எந்தெந்த ஊர்களுக்கு கிடாவை அழைத்து சென்று இருக்கிறீர்கள்?

‘‘நான் 15 ஆண்டுகளாக கிடா வளர்த்து வருகிறேன். திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களில் நடந்த போட்டிகளில் கிடாக்களை அழைத்து சென்றுள்ளேன். இதுவரை எந்த போட்டியிலும் எனது கிடா தோற்றதில்லை. பரிசுகளை வென்று என்னை பெருமைப்படுத்தி இருக்கிறது. நாட்டு செம்மறி கிடா என்பதால் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். போட்டியில் மோதுவதை பார்த்து எனது கிடாவை ரூ.40 ஆயிரம் வரை விலைக்கு கேட்டு வந்தனர். நான் கொடுக்காமல் வளர்த்து வருகிறேன். தற்போது என்னிடம் நான்கு கிடாக்கள் இருக்கின்றன’’ என்கிறார்.

சுரேஷைபோல் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், தனது மனைவி கார்த்திகாவுடன் கிடாவை பராமரித்து கொண்டிருந்தார். அவர் சொல்கிறார்:

‘‘கிடாவை எங்கள் வீட்டில் ஒரு நபராகத்தான் கருதி வளர்க்கிறோம். குழந்தைகள் அருகில் சென்றால் கூட முட்டாது. அதேநேரம் அறிமுகமில்லாத பிற ஆண்கள் யாரும் அதன் அருகில் செல்ல முடியாது. முட்டித் தள்ளிவிடும். மிகவும் பசியாக இருக்கும் சமயத்தில் வளர்ப்பவர்கள் அதன் அருகில் சென்றால் எழுந்து நின்று அவர்களை செல்லமாக முட்டும். அது வளர்ப்பவர்களுக்கும் கிடாவுக்கும் இடையே இருக்கும் அன்பின் வெளிப்பாடு. அருகில் யாரும் செல்லவில்லை என்றால் தான் பசியாக இருப்பதை உணர்த்துவதற்காக கட்டி வைத்துள்ள மரத்தில் முட்டும். அனைவரிடமும் அன்பாக பழகுவதால் கிடா இறந்தால் கூட அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவது இல்லை. வீட்டின் அருகிலோ அல்லது தோட்டத்திலோ புதைத்து விடுவோம்.

கிடா வளர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டால் அதனை சண்டையில் ஈடுபடுத்தலாம். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரே வயதுடைய கிடாவுடன் தான் மோத விட வேண்டும். அதிக வயதுடைய கிடாவுடன் மோத விடக்கூடாது. இதற்காகவே போட்டிக்கு முன்பதிவு தொடங்கும் போதே எங்களிடம் இருக்கும் கிடாவின் வயதுடையவை எத்தனை பங்கேற்கின்றன? எந்த கிடாவுடன் மோத விடலாம் என்பதை தீர்மானித்துவிடுவோம். ஒரு கிடாவை 9 ஆண்டுகள் வரை போட்டியில் பங்கேற்க வைக்கலாம்.

நான் வளர்த்த பல கிடாக்கள் பரிசுகளை வென்று தந்துள்ளன. ஒரு அறை முழுக்க அண்டா, பீரோ என பரிசு பொருட்கள் குவிந்துவிட்டது. அதிலும் ஒரு கிடா மட்டும் பல பரிசுகளை குவித்தது. அது தன்னுடன் மோதும் கிடா, எப்படிப்பட்டதாக இருந்தாலும் 10 முதல் 15 முட்டுகளில் வீழ்த்திவிடும். இதனால் அந்த கிடாவை வாங்க பலர் என்னிடம் விலை பேசினார்கள். ஒருவர் ரூ.80 ஆயிரம் தருவதாக சொன்னார். பரிசுகளையும், பலருக்கு மத்தியில் எனக்கு கவுரவத்தையும் அளித்த கிடாவை விற்க மனமில்லாமல் வளர்த்தேன். அது இறந்ததும் வீட்டில் அருகிலேயே புதைத்தேன். அதன் நினைவாக கொம்பை மட்டும் எடுத்து வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். தற்போது 6 கிடாக்கள் வளர்க்கிறேன். அதில் ஒரு கிடா மட்டும் 50 கிலோ எடைகொண்டது” என்றார்.

Next Story