பிச்சை எடுத்தவர்களுக்கு கல்விச் சேவை
தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிப்படிப்பை தொடருவதற்காக தனது நகைகளை அடமானம் வைத்து கல்விச் சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறார், நாகரத்னம்மா.
தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிப்படிப்பை தொடருவதற்காக தனது நகைகளை அடமானம் வைத்து கல்விச் சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறார், நாகரத்னம்மா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். அங்கு பள்ளிக்கூடங்களுக்கு செல்லாமல் சாலைகளில் பிச்சை எடுத்தும், பொருட்கள் விற்றும் திரிந்து கொண்டிருந்த சிறுவர்-சிறுமியர்கள் இவருடைய முயற்சியால் பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் நாகரத்னம்மா சாலைகளில் சிக்னல்களில் நின்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு பணமும், உணவும் வழங்கி வந்திருக்கிறார். பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பிச்சை எடுப்பதற்கும், பலூன் போன்ற பொருட்களை விற்பதற்கும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறார்.
‘‘அவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு போதிய வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள். அதேவேளையில் பிள்ளைகள் தினமும் வருமானம் தேடித்தருவதால் அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவும் அவர்களுக்கு மனமில்லை. இதையடுத்து அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கும் முனைப்போடு எனது நெருங்கிய தோழிகள் மூலம் களம் இறங்கினேன். சிறிய பாடசாலை ஒன்றை ஆரம்பித்து குழந்தைகளுக்கு கன்னடம், ஆங்கில எழுத்துக்கள், மழலை பாடல்களை பயிற்றுவிக்க தொடங்கினேன். தெருவோர குழந்தைகள் என்ற நிலையை மாற்றி தொடக்ககல்வி பயிலுவதற்கு பள்ளிக்கூடத்திற்கு செல்லும் நிலைக்கு அவர்களை பக்குவப்படுத்தினேன். ஆனால் அதற்கு பெரும்பாலான பெற்றோர் சம்மதிக்கவில்லை.
தங்கள் குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தும், பொருட்களை விற்க வைத்தும் வருமானம் தேடிக்கொண்டிருந்தவர்கள் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதை நேரத்தை வீணடிக்கும் செயலாக கருதினார்கள். அவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை புரியவைத்தேன். அரைமனதோடு ஒப்புக்கொண்டார்கள். ஒருவழியாக போராடி குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்த்தோம். ஆனால் அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் இல்லாததால் எனது திட்டம் முழு வெற்றி அடையவில்லை. அதனால் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அவர்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்தோம். பள்ளிச்சீருடைகள், நோட்டு-புத்தகங்கள், எழுது பொருட்களையும் வழங்கினோம். அதன் பிறகுதான் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்கூடத்திற்கு நேர்த்தியாக உடை அணிந்து சென்று ஆர்வமாக படிப்பை தொடர்ந்தார்கள். ஆனால் பெரும்பாலான பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் மூலம் கிடைத்துவந்த பணம் தடைப்பட்டுவிட்டதே என்ற ஆதங்கம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றுவதற்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் மூலம் முயற்சி எடுத்தோம். குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் நாங்கள் காண்பிக்கும் அக்கறையை பார்த்து நிறைய பேர் மனம்மாறிவிட்டார்கள். அதனால் அந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வி கிடைத்துக்கொண்டிருக்கிறது’’ என்கிறார்.
நாகரத்னம்மா நகைகளை அடமானம் வைத்தும் குழந்தைகளின் படிப்பு செலவுகளை சமாளித்திருக்கிறார். இவருடைய முயற்சியால் தற்போது 25-க்கும் மேற்பட்ட தெருவோர குழந்தைகள் தரமான கல்வியை பயின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
Related Tags :
Next Story