சோதனைக்குழாய் குழந்தையின் நினைவலைகள்
ஹர்ஷாவுக்கு வயது 32. மும்பையை சேர்ந்த இவர் சோதனைக்குழாய் சிகிச்சை மூலம் பிறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
ஹர்ஷாவுக்கு வயது 32. மும்பையை சேர்ந்த இவர் சோதனைக்குழாய் சிகிச்சை மூலம் பிறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். 1986-ம் ஆண்டு இவர் பிறந்த காலகட்டத்தில்தான் சோதனைக்குழாய் சிகிச்சை முறை இந்தியாவில் பிரபலமாக தொடங்கியது. ஹர்ஷாவின் பெற்றோர் ஷியாம்-மணி சவுதா. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்திருக்கிறது. தாய்மை அடைந்துவிடும் ஆசையில் பிரபல குழந்தை இன்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்துஜாவை சந்தித்திருக்கிறார்கள். இவர் அந்த சமயத்தில்தான் சோதனைக்குழாய் சிகிச்சை முறை பற்றி பி.எச்டி. ஆராய்ச்சி படிப்பை முடித்திருந்திருக்கிறார்.
அவர் மணி சவுதா-ஷியாம் தம்பதியருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்திருக்கிறார். இவர்களிடம் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் இருந்திருக்கிறது. டாக்டர் இந்துஜா, சோதனைக்குழாய் மூலம் முதல் குழந்தையை தனது சிகிச்சை மூலம் பெற்றெடுத்துவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்ததால் இலவசமாகவே சிகிச்சை அளித்திருக்கிறார். அவருடைய அதிர்ஷ்டம், முதல் முயற்சியிலேயே சோதனைக்குழாய் சிகிச்சை முறையில் மணி சவுதா கர்ப்பமாகிவிட்டார்.
‘‘1978-ம் ஆண்டு உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை இங்கிலாந்தில் பிறந்தது. அது மருத்துவ உலகின் மாபெரும் சாதனையாக பேசப்பட்டது. அப்போது மகப்பேறு மருத்துவத்தில் எம்.டி. படித்திருந்த நான், சோதனைக்குழாய் குழந்தை பற்றி பி.எச்டி. ஆராய்ச்சியை படிப்பை மேற்கொண்டிருந்தேன். ஆராய்ச்சி படிப்பை முடித்ததும் சிகிச்சைக்கு வந்திருந்த ஷியாம் - மணி சவுதா தம்பதியரிடம் சோதனைக்குழாய் முறை பற்றி பட விளக்கங்களுடன் விவரித்தேன். அவர்கள் எப்படியாவது தங்களுக்கு குழந்தை பிறக்கவேண்டும் என்று வேண்டினார்கள். அது நனவாகும் விதமாக முதல் முயற்சியிலேயே மணி சவுதா கர்ப்ப மடைந்துவிட்டார். 1986-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6- ந்தேதி ஹர்ஷா பிறந்தாள். டாக்டர் குஷும் சுவாரி எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். குழந்தை நல்லபடியாக பிறந்ததும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’’ என்கிறார், இந்துஜா.
சோதனைக்குழாய் முறையில் பிறந்த ஹர்ஷாவுக்கு திருமணமாகி, அவரும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார். இரண்டு குழந்தைகளையும் சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்திருக்கிறார். ஹர்ஷாவுக்கு பிரசவம் பார்த்ததும், டாக்டர் இந்துஜாதான்.
‘‘இதன் மூலம் சோதனைக்குழாய் மூலம் பிறந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இயல்பான வாழ்க்கை வாழ்வது உறுதியாகி இருக்கிறது. ஹர்ஷா வளர்ந்து ஆளாகியது முதல் திருமணமாகி குழந்தை பெற்றது வரை உடன் இருந்து கவனித்தேன். அவள் வாழ்க்கையில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’’ என்கிறார், டாக்டர் இந்துஜா.
‘‘ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் என்னை புகைப்படம் எடுத்து என் வளர்ச்சியை பத்திரப்படுத்தி வைத்தார்கள். அதன்மூலம் தான் நான் ஒரு சோதனைக்குழாய் குழந்தை என்பது நினைவுக்கு வருகிறது’’ என்கிறார், ஹர்ஷா.
இதுவரை டாக்டர் இந்துஜா 15 ஆயிரம் தம்பதியர் சோதனைக்குழாய் மூலம் பெற்றோராக உதவியாக இருக்கிறார்.
Related Tags :
Next Story