நோய் தீர்க்கும் தோட்டம்


நோய் தீர்க்கும் தோட்டம்
x
தினத்தந்தி 29 July 2018 3:26 PM IST (Updated: 29 July 2018 3:26 PM IST)
t-max-icont-min-icon

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டவரை வீட்டு தோட்டம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைத்திருக்கிறது. வீட்டில் வளர்க்கும் செடிகளுடன் நேரத்தை செலவிட்டு அவர் மன நிறைவுடன் வாழ்கிறார்.

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டவரை வீட்டு தோட்டம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைத்திருக்கிறது. வீட்டில் வளர்க்கும் செடிகளுடன் நேரத்தை செலவிட்டு அவர் மன நிறைவுடன் வாழ்கிறார். அமெரிக்கவாழ் இந்தியரான அவர் வளர்க்கும் செடிகள் காய்த்து குலுங்குவதை பார்த்து அந்த நாட்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த பெண்மணியின் பெயர் மீனல் சவுத்ரி. இவர் நாக்பூரை சேர்ந்தவர். என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்துவிட்டு அமெரிக்காவுக்கு வேலை தேடி சென்றிருக்கிறார்.

அங்கு சுமேத் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். 2012-ம் ஆண்டு வரை அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் நகர்ந் திருக்கிறது. வழக்கமான மருத்துவபரிசோதனை மேற்கொள்ள சென்றபோது தொண்டையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதனை பரிசோதித்தபோது தைராய்டு புற்றுநோய் தாக்கி இருப்பது தெரியவந்திருக்கிறது. ஒரு வாரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டிருக்கிறது. அதனால் தாய்மையடைவதற்கான வாய்ப்பு குறைவு என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்.

‘‘எனக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய்விட்டேன். ஏன் என்றால் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் நான் சிறப்பாகத்தான் கடைப்பிடித்தேன். அதனால் நோய் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு தைராய்டு சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது. அது இல்லாவிட்டாலும் தாய்மையடைய ஆசைப்பட்டு, தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கர்ப்பமானேன். ஆனால் பெரும் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிட்டது. கடும் வலி, வேதனைகளை அனுபவித்தேன். ரத்த இழப்பும் ஏற்பட்டது. தொண்டை மோசமானது. நாளுக்கு நாள் உடலும் பலவீனமானது. அந்த நாட்கள் மிக கொடுமையானவை’’ என்கிறார், மீனல் சவுத்ரி.

மீனல் கடும் வேதனைகளுக்கு மத்தியில் 2013-ம் ஆண்டு மகன் ரியானை பெற்றெடுத்திருக்கிறார். ஆனாலும் குழந்தை பிறந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. உடல் மற்றும் மன நல பாதிப்புகளுக்கு ஆளாகி அல்லல்பட்டிருக்கிறார். இதையடுத்து மீனலை கவனித்துக்கொள்வதற்காக அவரது பெற்றோர் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அப்போது மீனல் இந்திய உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் பலவகை காய்கறிகள், பழங்களின் விதைகளை எடுத்து சென்றிருக்கிறார்கள். அவைகளை அங்கு விதைத்து செடிகளை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். செடிகள் வளர்ப்பதில் மீனல் காட்டிய ஆர்வம் அவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றத்தை உண்டாக்கிவிட்டது.

‘‘நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாக்பூரில் உள்ள எங்கள் வீட்டில் தாயார் நிறைய செடிகளை வளர்த்தார். குழந்தை பருவம் முதலே நான் அவருடன் இணைந்து செடிகள் வளர்த்திருக்கிறேன். அமெரிக்காவில் மீண்டும் செடிகள் வளர்க்க தொடங்கியது மனதுக்கு உற்சாகம் அளித்தது. சோர்வடைந்த சமயங்களில் செடிகளுடன் நேரத்தை செலவிடும்போது புத்துணர்ச்சி கிடைத்தது. மேலும் வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகளை சாப்பிடுவது, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உத்வேகம் தந்தது” என்கிறார்.

மீனல் தனது மகன் ரியானுக்கு மூன்று வயது ஆனதும் பிறந்தநாள் பரிசாக மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறார். இதையடுத்து அவனும் செடி வளர்ப்பில் ஈடுபட தொடங்கியிருக்கிறான்.

‘‘என் மகன் சில காய்கறிகளை நான் பறித்து, சமைத்து கொடுக்கும் வரை காத்திருப்பதில்லை. செடியில் இருக்கும்போதே பறித்து சாப்பிட்டு விடுகிறான், தக்காளி பழங்களை விரும்பி சுவைக்கிறான்’’ என்கிற மீனல் 16 வகையான செடிகளை வீட்டில் வளர்க்கிறார். அதை பார்த்து பக்கத்து வீட்டு அமெரிக்கர்கள் ஆச்சரியப்பட்டு, அவர்களும் செடி வளர்ப்பில் ஆர்வம் காண்பிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

Next Story