பெற்றோர் கண்காணிப்பில் நடக்கும் பள்ளி


பெற்றோர் கண்காணிப்பில் நடக்கும் பள்ளி
x
தினத்தந்தி 29 July 2018 3:29 PM IST (Updated: 29 July 2018 3:29 PM IST)
t-max-icont-min-icon

சீனாவின் ஸெஜியாங் பல்கலைக்கழகம் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பள்ளி கல்வியில் புதிய வழிமுறைகளைப் பின்பற்ற முடிவு செய்திருக்கிறது.

சீனாவின் ஸெஜியாங் பல்கலைக்கழகம் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பள்ளி கல்வியில் புதிய வழிமுறைகளைப் பின்பற்ற முடிவு செய்திருக்கிறது. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் பாடம் படிப்பதை அவர்களுடைய பெற்றோர் பார்க்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே தங்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் தங்கள் குழந்தைகளின் வகுப்பறைகளை பெற்றோர் கவனிக்கலாம். பரிசோதனை முயற்சியாக 200 பெற்றோர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இதற்கு பெற்றோர் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தங்கள் பிள்ளைகள், ஆசிரியர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பெற்றோர் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

‘‘வீட்டில் சரியாகப் பேசாத என் மகள், வகுப்பில் எவ்வளவு வாய் பேசுகிறாள்’’ என்று ஆச்சரியப்பட்டார், ஒரு அம்மா. ‘‘கேள்விக்குப் பதில் சொன்ன என் மகனை இன்னும் ஆசிரியர் அமரச் சொல்லவில்லை. பாவம் நின்றுகொண்டிருக்கிறான்’’ என்று வருத்தப்பட்டார் இன்னொரு அப்பா. ‘‘என் மகள் பார்வை குறைபாடு உடையவள். அவள் சரியான இடத்தில் அமரவில்லை’’ என்பது தாயார் ஒருவரின் ஆதங்கமாக இருக்கிறது.

தங்களின் ஒவ்வொரு அசைவையும் பெற்றோர் கவனிக்கிறார்கள் என்பதை மாணவர்களுக்கும் சொல்லிவிட்டார்கள். அதனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் வகுப்பறையில் நீண்ட நேரம் அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஒரு மாணவி மட்டும் ‘‘என் பெற்றோர் கவனிப்பதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை’’ என்கிறார்.

வகுப்பறை நிகழ்வுகளை பெற்றோர் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது ஆசிரியர்களுக்கு பதற்றத்தையும், பயத்தையும் வரவழைத்திருக்கிறது. மாணவர்கள் செய்யும் தவறுகளை சாதாரணமாக எடுத்து புரியவைத்தாலும் பெற்றோர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அதனால் குழந்தைகளை தொட்டு பேசுவதற்கே யோசிக்கிறார்கள். ‘‘ஆரம்பத்தில் இப்படி இருந்தாலும் காலப்போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். ஆசிரியர், மாணவர், பெற்றோர் மூவரும் தங்கள் பொறுப்புகளை சரியாக செய்வார்கள்’’ என்பது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கருத்தாக இருக்கிறது.

Next Story