ஆபத்து நிறைந்த அவசர கல்யாணங்கள் - தீர்வு என்ன?
குடும்பத்தின் செல்ல மகளாக வலம் வந்தாள், வனிதா. நேர்த்தியான ஆடை, அணிகலன்களோடு எப்போதும் அழகு தேவதையாக சிரித்த முகத்தோடு காணப்படுவாள்.
முதல் சம்பவம்:
குடும்பத்தின் செல்ல மகளாக வலம் வந்தாள், வனிதா. நேர்த்தியான ஆடை, அணிகலன்களோடு எப்போதும் அழகு தேவதையாக சிரித்த முகத்தோடு காணப்படுவாள். அவள் பருவ வயதை அடைந்ததும் வசதிபடைத்தவர்களும், நல்ல வேலையில் இருப்பவர்களும் பெண் கேட்டு வந்தார்கள். ‘வசதியை பார்த்து திரு மணம் செய்துகொடுத்தால், மகள் கண்கலங்க வேண்டியதாகிவிடும். வசதியானவர்கள் நல்லவர்களாகவும் இருக்கமாட்டார்கள். வசதியற்றவர்கள் என்றால் நல்லவர்களாக இருப்பார்கள். அதனால் ஏழை யாருக்காவது திருமணம் செய்துகொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக்கொண்டால் மகள் நிரந்தர மகிழ்ச்சியோடு வாழ்வாள்’ என்று நினைத்து, பக்கத்து ஊரை சேர்ந்த வசதியற்ற, படித்த இளைஞர் ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைத்தார்கள். அவருக்கு பெற்றோர் கிடையாது. தங்கள் சொல்படி கேட்பார் என்று நினைத்தார்கள். ஆனால் திருமணமான ஆறே மாதத்தில், அவளது முகத்தில் இருந்த நிரந்தர சிரிப்பு மறைந்தது. அழுகை நிரந்தரமானது. அவளது மண வாழ்க்கை தோல்வியடைந்தது.
இரண்டாவது சம்பவம்:
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, கம்ப்யூட்டர் தொடர்புடைய பயிற்சி ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோது ராதிகா, காதல் வசப்பட்டிருக்கிறாள். காதலிலே தீவிரமாக இருந்ததால், பயிற்சியில் கோட்டைவிட்டாள். ஆனால் பெற்றோரிடம், அனைத்து சப்ஜெக்ட்டிலும் வெற்றி பெற்றுவிட்டதாக பொய் சொல்லியிருக்கிறாள். பயிற்சி நிறுவனத்தில் இருந்து ரிசல்ட் தபாலில் அனுப்பப்பட, அதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவள் பெரும்பாலான சப்ஜெக்ட்களில் தோல்வியடைந்திருந்தாள். அவளிடம் தகவல் தெரிவிக்காமல், அவளை வேவு பார்த்த தந்தை, அவள் காதலனோடு சுற்றுவதை கண்டுபிடித்துவிட்டார். அதை பற்றி அவளிடம் வாயே திறக்காத தந்தை, தனது பூர்வீக கிராமத்தில் அவளுக்கு அவசரமாக ஒரு மாப்பிள்ளையை தயார் செய்துவிட்டார். ஊருக்கு சென்று வருவோம் என்று மகளை அழைத்துச்சென்று அங்கேயே தங்க வைத்து, வற்புறுத்தி அவசர அவசரமாக திருமணத்தையும் நடத்தி வைத்துவிட்டார். மகளை அந்த ஊரிலே குடும்பம் நடத்த வைத்தார். ‘அப்பாடா தப்பித்தோம், இனி நிம்மதி..’ என்று அவர் திரும்பி வர, அடுத்த சில நாட்களிலே கணவரை பிரிந்து தாய் வீடு வந்துவிட்டாள், ராதிகா.
மூன்றாவது சம்பவம்:
சிந்துஜா, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்தாள். அடக்க ஒடுக்கமான பெண். அதே நிறுவனத்தில் அவளைவிட சற்று உயர்ந்த பொறுப்பில் வேலை பார்த்து வந்த இளைஞன் ஒருவன் அவளை காதலித்தான். அவளுக்கு விருப்பம் இல்லாததால் காதலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறாள். அவனோ தொடர்ந்து ஒருதலையாக காதலித்து வந்தான். திடீரென்று ஒருநாள் சிந்துஜாவிடம் ‘நீ என்னை காதலிக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன்’ என்று விஷத்தை கையில் வைத்துக்கொண்டு மிரட்டியிருக்கிறான். தற்கொலை மிரட்டலுக்கு பயந்துபோய் அவனை காதலித்திருக்கிறாள். பெற்றோரை எப்படியோ சம்மதிக்கவைத்து அவனையே திருமணமும் செய்துகொண்டாள். மூன்றே மாதத்தில் ‘அவரோடு தன்னால் வாழ முடியாது’ என்று கண்ணீரும் கம்பலையுமாக திரும்பி வந்துவிட்டாள்.
இப்படி, மணவாழ்க்கையில் தோல்வியடைந்த இந்த மூன்று பெண்களையும் ஒரே வாரத்தில் கவுன்சலிங்கில் சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. திருமணமாகி ஒருவருடம் கூட ஆகாத நிலையில் இவர்கள் தாம்பத்ய வாழ்க்கை முடிந்துபோயிருக்கிறது. வரனை தேர்ந்தெடுப்பதில் விழிப்புணர்ச்சி அடைந்திருப்பதாக நாம் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் திருமணங்கள் தோல்வியடைவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
மேற்கண்ட மூன்று திருமணங்களும் தோல்வியடைய என்ன காரணம் என்பதை ஆழமாக நாம் அலசினால்தான், இது போன்ற மணவாழ்க்கை தோல்விகள் எதிர்காலத்தில் ஏற்படுவதை நம்மால் தடுக்கவும், தவிர்க்கவும் முடியும்.
உங்களுக்கு வனிதா போன்றொரு மகள் இருந்தால், உங்கள் வசதி வாய்ப்பு, சமூக அந்தஸ்து, உங்கள் மகளின் கல்வித்தகுதி, அவளது எதிர்பார்ப்புகள் போன்றவைகளை கருத்தில்கொண்டு அதற்கு சமமான வரனை மட்டும் தேர்ந்தெடுங்கள். ஏன்என்றால் இருவருக்கும் வயது பொருத்தம் போன்று, இதர தகுதிகளிலும் பொருத்தமும், சமநிலையும் இருக்கவேண்டும். தற்போது ‘வீட்டோடு மாப்பிள்ளை’ என்ற கொள்கை கேலிக்குரியதாகிவிட்டது. அந்த மாப்பிள்ளையிடமும் தான் அடிமைப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம்தான் தலைதூக்கும். மாமியாரோ, மாமனாரோ, மனைவியோ உரிமையோடு சற்று உரக்க பேசிவிட்டாலே ‘வேண்டுமென்றே மட்டம் தட்டுகிறார்கள்’ என்ற எண்ணம் அந்த வீட்டோடு மாப்பிள்ளைக்கு வந்துவிடும். அதுவே அவர்களது தாம்பத்ய வாழ்க்கையில் விரிசல் உருவாகிவிடும்.
வசதியில்லாதவர் தங்கள் மகளுக்கு அடங்கி நடப்பார் என்று பெற்றோர் நினைப்பது தவறு. ஏன்என்றால் அது ஆதிக்க மனப்பான்மை கொண்ட எண்ணம். ஆதிக்க மனப்பான்மை இல்லாத சமநிலைத்தன்மையே மணவாழ்க்கை வெற்றிக்கு ஏற்றது. அதே நேரத்தில் பெற்றோர் இல்லாதவர் அன்புக்கு ஏங்குவார் என்பது ஒருவேளை சரியாக இருக்கலாம். ஆனால் அந்த ஏக்கம் நிறைந்த அன்பு மட்டுமே மணவாழ்க்கைக்கு போதுமான அஸ்திவாரம் அல்ல. உங்களுக்கு ஒரு இளைஞர் மீது அனுதாபம் இருந்தால் அவர் வாழ்க்கையில் உயர ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யுங்கள். பணம், பொருள், கல்வி போன்ற எந்த உதவியையும் வழங்கலாம். ஆனால் மகளை திருமணம் செய்துகொடுத்து அவரது வாழ்க்கையை உயர்த்தவேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்படிப்பட்ட திருமணங்களில் 95 சதவீதம் தோல்வியில் முடிந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ராதிகாவின் மணவாழ்க்கை சொற்ப நாட்களிலே முடிந்துபோக அவளது பெற்றோர் காட்டிய அவசரம்தான் காரணம். அவள் ஒழுங்காக படிக்காமல் பொய் சொல்லிவிட்டு காதலிக்கிறாள் என்பதை அறிந்ததும், அவளை அழைத்து பக்குவமாக, அதே நேரத்தில் வெளிப்படையாக பெற்றோர் பேசியிருக்கவேண்டும். ‘முதலில் பயிற்சியை முறையாக முடித்துவிட்டு, உன் எதிர்காலத்திற்காக ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள். அதுவரை காதலில் இருந்து விலகி இரு. நீ காதலிக்கும் நபர் உனக்கு பொருத்தமானவராக இருந்தால், எதிர் காலத்தில் நாங்களே தயங்காமல் அவருக்கு உன்னை திருமணம் செய்து வைப்போம். எங்களை நீ நம்பு’ என்று மகளிடம் கூறி, அவளது நம்பகத்தன்மையை பெற்றிருக்கவேண்டும்.
ராதிகா காதலித்தது தவறு என்று அவளது பெற்றோர் நினைத் திருக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் அவர்கள் அவளது அனுமதி இல்லாமலே அவளுக்கு அவசரக் கல்யாணம் செய்து வைத்தது, அதைவிட மிகப்பெரிய தவறு. யாராக இருந்தாலும் அவசர திருமணங்களில் நிதானத்தை இழந்துவிடுவார்கள். அவசர திருமணம் நடத்தும்போது அதில் இணையும் இணைக்கு, ‘இவ்வளவு அவசரத்தில் திருமணம் செய்து வைக்கவேண்டிய காரணம் என்ன?’ என்ற சந்தேகம் எழும். அந்த சந்தேகத்திற்கு இணை, முதலிரவு அறையிலே விடை தேட முயற்சிப்பார். அப்போது பெண்ணிடம் ஏற்படும் தடுமாற்றமும், அதற்கு பிந்தைய விசாரணைகளும் மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்துவிடும்.
சிந்துஜாவின் மணவாழ்க்கை முறிந்துபோக கணவன் முக்கிய காரணம். அவர் மிரட்டி காதலுக்கு பணிய வைத்திருக்கிறார். இப் படிப்பட்ட மிரட்டல் மனிதர்கள், காதலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திற்கும் இந்த மிரட்டல் ஆயுதத்தைதான் கையிலெடுப்பார்கள். இவர்களை போன்றவர்களை நம்பி, பெண்கள் எதிர்காலத்தை ஒப்படைப்பது சரியான முடிவல்ல.
இப்படி அனுதாபப்பட்டும், அவசரப்பட்டும், உணர்ச்சிவசப்பட்டும் மணவாழ்க்கையை தேர்ந்தெடுக்க நிதானமின்மைதான் முக்கிய காரணம். நிதானம் இல்லாவிட்டால் ஒன்றுக்கு இருமுறை யோசிக்கும் பக்குவமும் இல்லாமல் போய்விடும்.
நாம் ஒவ்வொருவரும் பள்ளி மாணவர்களாக இருக்கும்போது நமக்கு கொடுக்கப்படும் பாடங்களை படித்து, பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தக்கபடி சரியாக சிந்தித்து அதை பதிலாக எழுதி ‘பாஸ்’ ஆகிவிடுவோம். அதுபோல் வாழ்க்கை கல்வியிலும் ‘பாஸ்’ ஆகவேண்டும் என்றால், பத்திரிகைகளை படிக்கவேண்டும். நம்மை சுற்றி நடப்பவைகளை சுவாரசியமான சம்பவங்களாக நினைத்து படித்த தும் மறந்துவிடாமல், நமது வாழ்க்கையில் அதுபோன்ற சூழ்நிலைகள் வரும்போது, அதை முன்னுதாரணமாகக்கொண்டு ஆராய்ந்து முடிவெடுக்க பழகவேண்டும். அப்படி நிதானமாக முடிவெடுக்க கற்றுக்கொண்டால் திருமணத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையில் எல்லாநேரத்திலும் தோல்வி களை தவிர்த்திடலாம்.
-விஜயலட்சுமி பந்தையன்.
Related Tags :
Next Story