ஆத்மதிருப்தி தரும் ஆனந்த வாழ்க்கை


ஆத்மதிருப்தி தரும் ஆனந்த வாழ்க்கை
x
தினத்தந்தி 29 July 2018 4:37 PM IST (Updated: 29 July 2018 4:37 PM IST)
t-max-icont-min-icon

அன்னபூரணிக்கு 54 வயது. இவர் நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர். அவர் களது பாரம்பரிய வழக்கப்படி ஐம்பது வயதைக் கடந்த பெண்களின் பெயரோடு ஆச்சியையும் இணைத்து அன்பொழுக அழைக்கிறார்கள்.

‘ஐம்பது வயதை கடந்த பின்பு பெண்களுக்கு அழகு, ஆரோக்கியம், ஆனந்தம் மூன்றும் முழுமையாக கிடைக்க என்ன செய்யவேண்டும்?’ என்ற கேள்வியை அன்னபூரணி ஆச்சியிடம் கேட்டால், “பெண்கள் அந்த பருவத்தில் தங்கள் குடும்ப வாழ்க்கையை சமூக வாழ்க்கையாக மாற்றிக்கொண்டால் அழகு, ஆரோக்கியம், ஆனந்தம் மூன்றையும் பெற்று முழுமகிழ்ச்சியுடன் வாழலாம்” என்று கூறும் அவர், எல்லா பெண்களும் அத்தகைய வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறார்.

அன்னபூரணிக்கு 54 வயது. இவர் நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர். அவர் களது பாரம்பரிய வழக்கப்படி ஐம்பது வயதைக் கடந்த பெண்களின் பெயரோடு ஆச்சியையும் இணைத்து அன்பொழுக அழைக்கிறார்கள். இவர் சமூகத்திற்கு பயன்படும்படி சேவை செயல்பாடுகள் கலந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அதற்கு ஏற்றபடி தனது உடல், மனம், சிந்தனைகளை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்.

இவர் அதிகாலையில் விழித்துவிடுகிறார். பத்து வயதில் இருந்து தற்போது வரை தினமும் ஒரு மணி நேரம் யோகாசனம் செய்வதை வாழ்க்கை முறையாக்கி இருக்கிறார். “ஐம்பது வயதைக் கடந்த பெண்களில் ஏராளமானவர்களை நான் தினமும் சந்திக்கிறேன். அவர்களில் பலர் சோர்ந்தும், உற்சாகமின்றியும் காணப்படுகிறார்கள். நான் எப்போதும் உற்சாகமாக சோர்வின்றி செயல் படுவேன். அதற்கு காரணம் யோகாதான். பெண்கள் அனைவராலும் தங்கள் வீட்டிற்குள் இருந்தபடியே மிக எளிதாக யோகாசனங்களை செய்து ஆரோக்கியத்தை ேதடிக்கொள்ள முடியும். யோகாசனம், அனைத்து விதமான உடல் வலிகளையும் போக்கிவிடும்” என்று கூறும் அன்னபூரணி, தினமும் தோட்ட வேலையிலும் ஈடுபடுகிறார்.

“மனக் கவலை எதுவுமின்றி வாழவேண்டும் என்று நினைக்கும் பெண்கள், தினமும் தோட்ட வேலையில் சிறிது நேரம் ஈடுபடவேண்டும். விதைத்தும், நட்டும் நம்மால் உருவாக்கப்பட்டு வளரும் செடிகளும், கொடிகளும், மரங்களும் நம் முன்னால் பூத்தோ, காய்த்தோ, பழுத்தோ தொங்கும். அவைகளை தினமும் ரசித்த படியே பராமரிக்கத் தொடங்கிவிட்டால், அவைகளோடு நமக்கு ஆத்ம பந்தம் உருவாகிவிடும். அப்போது நமது மனதில் இருக்கும் பாரமெல்லாம் இறங்கிவிடும்” என்கிறார்.

வீட்டுத் தோட்டம் மூலம் பெண்களின் கவலையை மறக்க வழிசொல்லும் அன்னபூரணி, தன் கணவரோடு இணைந்து ஆன்மிக பணிகளிலும் ஈடுபடுகிறார். கணவர் தொழிலதிபர் சுப்புசுந்தரம் செட்டியார். “சிவனால் உருவாக்கப்பட்ட நகரம் என்று போற்றப்படுவது, உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் காசி என்ற வாரணாசி. அங்கிருக்கும் விஸ்வநாதர் ஆலயத்தில் 238 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம். இ்ந்த பணி எங்களுக்கு ஆத்ம திருப்தியை தந்திருக்கிறது” என்று கூறும் அன்னபூரணிக்கு சமூக சேவை யிலும் அதிக ஈடுபாடு இருக்கிறது.

“ஒய்.டபிள்யூ.சி.ஏ. எனப்படும் இளம் கிறிஸ்தவ பெண்கள் அமைப்பு உலகளாவிய சேவை நிறுவனமாகும். அதன் சார்பில் ஏராளமான சமூக சேவைகள் செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள அந்த அமைப்பில் நான் ‘போர்டு மெம்பராக’ இருக்கிறேன். அங்கு செயல்படுத்தப்படும் ‘அர்பன் கம்யூனிட்டி டெவலப்மென்ட் ப்ராஜெக்ட்’ என்ற திட்டத்திற்கு தலைமை பொறுப்பும் வகிக்கிறேன். அதன் மூலம் குடிசைப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, வாழ்வியல் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்னதான் நாம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தாலும், சமூகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்தால் மட்டுமே நமது வாழ்க்கை முழுமையடையும்” என்று தத்துவார்த்தமாக விளக்கம் தரு கிறார், அன்னபூரணி.

சமூகத்திற்கு பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அவரிடம், நமது உரையாடல் தொடர்கிறது..

உங்கள் பெற்றோரை பற்றியும், உங்கள் கல்வித்தகுதியை பற்றியும் கூறுங்கள்?

“புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொப்பனாப்பட்டியில் நான் பிறந்தேன். எனது பெற்றோர் என்ஜினீயர் தியாகராஜன்- மீனாட்சி ஆச்சி. எனக்கு இரண்டு அண்ணன்களும், ஒரு அக்காளும் உண்டு. என் தாயார் துணியில் அற்புதமான கலைவேலைப்பாடுகளை ெசய்வார். அதுபோல் வீட்டுத் தோட்டத்தையும் உருவாக்கி, சிறப்பாக பராமரிப்பார். அற்புதமாக சமைக்கவும் செய்வார். அந்த மூன்று கலைகளையும் சிறுவயதிேல என் தாயாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

கல்விக்காக நாங்கள் திருச்சியில் தங்கியிருந்தபோது சாவித்திரி வித்யாசாலா பள்ளியில் படித்தேன். அங்கு வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை கற்றுத்தந்தார்கள். நான் இன்று வரை செய்து கொண்டிருக்கும் யோகாசனத்தை அங்குதான் கற்றேன். ஆன்மிக ஈடுபாடும் அப்போதே எனக்கு ஏற்பட்டுவிட்டது. விளையாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தேன். பின்பு சத்திரம் பகுதியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் கற்றேன். அங்கு பாரம்பரியம், பண்பாடு போன்ற பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. கல்லூரியில் முதல் இரண்டு வருடங்கள் பாவாடை, தாவணிதான் உடுத்தவேண்டும். கடைசி வருடம் புடவை கட்டவேண்டும். அப்போது எங் களுக்கு பாவாடை தாவணி சவுகரியமான உடையாகத்தான் இருந்தது.

கல்லூரி காலத்திலே நாங்கள் ஏழை மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மாதத்தில் ஒருநாள் எங்களை கிராமங் களுக்கு அழைத்துச் சென்று சேவை செய்யும்படி கூறுவார்கள். அப்போதுதான் ஏழைப் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். அப்போதே என்னிடம் சேவை உணர்வு உருவாகிவிட்டது”

திருமணத்திற்கு பின்பு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி சொல்லுங்கள்?

“எனக்கு 21 வயதில் திருமணம் நடந்தது. என் கணவர் சுப்புசுந்தரம் பி.காம். மற்றும் தோல் தொழில் நுட்ப கல்வி பயின்றவர். அவரது சொந்த ஊர் வலையப்பட்டி. எங்களுக்கு மகள் ஹாசினியும், மகன் பாலசுந்தரமும் பிறந்தார்கள். எனது மாமனார் சுந்தரம் செட்டியாரும், மாமியார் நாகரத்தினம் ஆச்சியும் எங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்த்தது மறக்கமுடியாத அனுபவம். பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தபோது என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்தது.

என் கணவருக்கு ஒரே நேரத்தில் மூன்று முறை இதயசெயலிழப்பு ஏற்பட்டது. அப்போது ஒருமுறை அவரது உடலே முழுமையாக நீலநிறமாகிவிட்டது. மிக கடுமையாக போராடி, பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பின்பே அவர் இயல்புநிலைக்கு திரும்பினார். அப்போதுதான் என் கணவர், வெளி உலகத்தோடும் சமூகத்தோடும் கலந்து வாழும் வாழ்க்கை முறைக்கு என்னை மாற்றினார். என்னை சுயமாக வலுப்படுத்திக்கொள்ளவும் தயார் செய்தார். நான் கார் ஓட்டுவதற்கு கற்றேன். கம்ப்யூட்டர் கல்வியில் தேர்ச்சி பெற்றேன். சமூக சேவை அமைப்புகளில் இணைந்து செயல்படத் தொடங்கினேன். பெண்களின் கஷ்டங்களை தீர்க்கவும் களமிறங்கினேன். கணவரோடு இணைந்து ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபட்டேன்”

உங்கள் பிள்ளைகளை பற்றி கூறுங்கள். அவர்களிடமும் சமூக சேவை அக்கறை இருக்கிறதா?

“எனது மகள் ஹாசினி என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. கற்றுவிட்டு அமெரிக்கா சென்றார். அட்லாண்டாவில் இருக்கும் ஜார்ஜியா ஸ்டேட் யூனிவர்சிட்டியில் மூன்று வருட எம்.எஸ். படிப்பை ஒன்றரை ஆண்டிலே படித்துவிட்டு அங்கேயே உயர்பொறுப்பில் வேலை பார்க்கிறார். நன்றாக ஓவியம் தீட்டுவார். அதில் தேசிய விருதும் பெற்றிருக்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, ஸ்பானீஷ் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இளம் வயதிலே சமையல் கலையிலும் தேறிவிட்டார். சென்னையில் கல்லூரியில் படிக்கும்போதே பகுதிநேரமாக ஏற்றுமதி வியாபாரம் செய்து நிறைய பணம் சம்பாதித்து ஏழை மாணவர்களை படிக்கவைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கும் நிறைய உதவி செய்தார். கல்லூரி காலத்திலே கிட்டத்தட்ட 500 ேபருக்கு வேலையும் வாங்கிக்கொடுத்திருக்கிறார். மகன் பாலசுந்தரமும் பள்ளிக் கல்லூரிகளில் சிறப்பாக படித்து தேர்ச்சி பெற்றவர். அவரும் அமெரிக்காவில் எம்.எஸ். படித்துவிட்டு அங்கேயே பணியாற்றுகிறார். இருவருமே சமூக சேவையில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். திரு மணத்திற்காக இருவருக்குமே பொருத்தமான ஜோடிகளை ேதடிக்கொண்டிருக்கிறோம்..”

வரலாற்று சிறப்புமிக்க காசி விஸ்வ நாதர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்துவைக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?

“காசி விஸ்வநாதர் ஆலயம் பல்வேறுகட்ட தொடர் தாக்குதல்களுக்கு பிறகு 1777-ம் ஆண்டு மறுநிர்மாணம் செய்யப்பட்டது. இந்தூர் மகாராணி அகில்யா பாய் ஹோல்கர் அதனை கங்கை ஆற்றின் மேற்கு கரையில் நிர்மாணித்தார். அதுதான் இன்றைய காசிவிஸ்வநாதர் ஆலயம். அதற்கு பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங் ஆயிரம் கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். நாங்கள் அங்கு வழிபாட்டிற்கு சென்றபோது வடக்கு வாசலுக்கு வெள்ளி கவசங்கள் செய்து கொடுத்தோம். பின்பு அந்த ஆலயத்தின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டோம். அப்போது உத்தரகாண்ட் அரசாங்கம் கோவிலுக்கு முதல் முறையாக கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்தது. அந்த பொறுப்பை என் கணவரிடம் ஒப்படைத்தது. நாங்கள் இங்குள்ள பிச்சை குருக்கள் தலைமையில் ஏராளமான சிவாச்சாரியார்களை அழைத்து சென்று முறைப்படி கும்பாபிஷேகம் செய்தோம். இதை தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். காசி விஸ்வநாதர் கோவில் தலைமை பூசாரி பாண்டா குடும்பத்தை சேர்ந்த 55 பேரும் இந்த ஆன்மிக பணிக்கு ஒத்துழைத்தார்கள். இங்குள்ளவர்களின் உதவியும், ஒத்துழைப்பும் எங்களுக்கு கிடைத்தது. இது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்” என்று கூறும் அன்னபூரணி, மாலை நேரங்களில் தினமும் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிடுகிறார். ஒய்.டபிள்யூ.சி.ஏ. சார்பில் சென்னையில் சந்தோஷ் நகர், புல்லாபுரம், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் குடிசைப் பகுதி சிறுவர்- சிறுமியர்களுக்காக இரவு நேர பாடசாலை நடக்கிறது. அவர்களுக்கு தரமான கல்வியை வழங்க அன்னபூரணி ஆச்சி மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். இரவு நேர பாடசாலையில் கல்வி போதிப்பதை பார்வையிட்டு பயிற்றுனர்களையும், மாணவர்களையும் ஊக்குவிக்கிறார். குடிசைப் பகுதி பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் உழைக்கிறார்.

இவரைப் போன்றவர்களின் சேவை நாட்டுக்குத் தேவை!

Next Story