வேனில் கடத்திய 900 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை


வேனில் கடத்திய 900 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 July 2018 4:30 AM IST (Updated: 29 July 2018 9:06 PM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே வேனில் கடத்திய 900 லிட்டர் மண்எண்ணெயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நித்திரவிளை,

குமரி மாவட்டம் வழியாக ரே‌ஷன் அரிசி, மணல், மண்எண்ணெய், எரி சாராயம் போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், பறக்கும்படை அதிகாரிகள் மாவட்டத்தின் பல பகுதிகளில் சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் சொகுசு கார், வேன் போன்றவை மூலம் நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலையில் நித்திரவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக கேரளாவை நோக்கி ஒரு வேன் வேகமாக சென்றது. வேனின் மேல் பகுதியில் பிளாஸ்டிக் கேன்கள் இருந்தன.

இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வேனை துரத்தி சென்றனர். அதிகாரிகள் துரத்துவதை கண்டதும் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.

வேனை சோதனை செய்த போது, 23 கேன்களில் சுமார் 900 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது, மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெய். இந்த மண்எண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் வேனையும், மண்எண்ணெயையும் பறிமுதல் செய்தனர். மண்எண்ணெயை இனயம் அரசு குடோனிலும், வாகனத்தை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய வேன் டிரைவர் யார்? என தேடி வருகிறார்கள்.

Next Story