ஆரல்வாய்மொழி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது குழந்தை பலி


ஆரல்வாய்மொழி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 30 July 2018 4:30 AM IST (Updated: 29 July 2018 9:31 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது குழந்தை பலியானது.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 500–க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் மேற்கு வங்காளம், ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்து பணியாற்றி வருகிறார்கள்.

பொதுவாக செங்கல் சூளையில் இரவு –பகல் பணிகள் நடைபெறும். இதனால் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்குவதற்காக செங்கல் சூளை அருகிலேயே குடியிருப்புகள் அமைத்து கொடுக்கப்படும்.


மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா காலிகாஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்ராஜ்(வயது 30). இவருடைய மனைவி துர்கேஸ்வரி(28). இவர்களுக்கு 3½ வயதில் ஒரு மகளும், 1½ வயதில் ரோகித் ராஜா என்ற குழந்தையும் உள்ளனர்.

 சுபாஷ்ராஜ் தனது மகளை ஊரில் உள்ள உறவினர் பொறுப்பில் விட்டு விட்டு, தாய் மற்றும் மனைவி, குழந்தையுடன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆரல்வாய்மொழி அருகே முத்து நகர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்தார். அவர்கள் செங்கல் சூளையின் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து குடும்பத்துடன் வேலைக்கு சென்று வந்தனர். இவர்களது குடியிருப்பு பகுதியில் 4 அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டியும், அதையொட்டி மண்மேடும் உள்ளது.


இந்தநிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைநாள் என்பதால் சுபாஸ்ராஜ் தனது தந்தையுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு சென்றனர். துர்கேஸ்வரி வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ரோகித் ராஜா வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். அவ்வப்போது, துர்கேஸ்வரி வெளியே வந்து குழந்தையை பார்த்துவிட்டு சென்று வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.

அதேபோல் துர்கேஸ்வரி வெளியே வந்து பார்த்தபோது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள வீடுகளில் சென்று தேடினார். ஆனால், குழந்தை கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அருகில் உள்ள தொட்டியில் பார்த்தபோது, குழந்தை ரோகித் ராஜா தண்ணீர் மூழ்கி கிடப்பதை கண்டு அலறினார். உடனே தொட்டிக்குள் இறங்கி குழந்தையை மீட்டார்.


பின்னர், 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ரோகித்ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அதைகேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story