காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி மேலும் ஒருவரின் கதி என்ன? தீயணைப்பு வீரர்கள் தேடுகிறார்கள்
திருச்சி திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியானார்கள். இதில் 2 வாலிபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் ஒருவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள்.
திருச்சி,
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், காவிரி ஆற்றில் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று பகல் திருச்சி திருவளர்ச்சோலை அருகே பொன்னுரங்கபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலியானார்கள். மேலும் ஒருவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் அவரை தேடி வருகிறார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:–
விழுப்புரம் மாவட்டம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 25). மெக்கானிக்கான இவருடைய கடையில் வேலை பார்த்து வந்தவர் சசி(19). சசிகுமாரின் உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(14), ஜெய்குமார்(24), நண்பர் சுரேஷ்பாபு(42). இவர்கள் 5 பேரும் கடந்த 27–ந் தேதி இரவு விழுப்புரத்தில் இருந்து காரில் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் 28–ந் தேதி நள்ளிரவுக்கு மேல் குற்றாலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு காரில் புறப்பட்டனர். அவர்கள் நேற்று காலை 11 மணி அளவில் திருச்சி வந்தனர்.
திருச்சியில், திருவளர்ச்சோலை அருகே பொன்னுரங்கபுரம் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் காரை நிறுத்திவிட்டு, அவர்கள் கொண்டு சென்ற அடுப்பு மற்றும் பாத்திரங்களை வைத்து சமையல் செய்தனர். பின்னர் காவிரி கரையோரம் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்தபிறகு கைகளை கழுவுவதற்காக சசிகுமார், சசி, விக்னேஷ் ஆகிய 3 பேரும் ஆற்றில் இறங்கினர். அப்போது உற்சாக மிகுதியால் ஆற்றுக்குள் இறங்கி குளிக்க தொடங்கினர். சிறிதுநேரத்தில் 3 பேரும் ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனைக்கண்டு கரையில் இருந்த ஜெய்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் கூச்சலிட்டபடி அவர்களை காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி சென்றார். இதில் அவரும் தண்ணீரில் சிக்கி கொண்டார். அவர்களது சத்தம்கேட்டு பொன்னுரங்கபுரத்தை சேர்ந்த செங்கல்சூளையில் வேலை பார்த்து வரும் சிவா(18) தனது கைலியை கழற்றி தூக்கி வீசி ஜெய்குமாரை மட்டும் காப்பாற்றினார். ஆனால் மற்ற 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறை மாவட்ட அதிகாரி ராமமூர்த்தி தலைமையில், ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று ஆற்றில் குதித்து மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்டநேரம் தேடி மாலை 3 மணி அளவில் சசி உடலை மீட்டனர். அதன்பிறகு 4.30 மணி அளவில் சசிகுமாரின் உடலையும் மீட்டனர். தொடர்ந்து, விக்னேஷின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் அங்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களது உடல்களை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே நேற்று மாலை 6 மணி வரை தேடியும் விக்னேஷை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இருட்டி விட்டதால் இன்று(திங்கட்கிழமை) காலையில் மீண்டும் தேடலாம் என்று தீயணைப்பு வீரர்கள் சென்று விட்டனர்.
விழுப்புரத்தை சேர்ந்த சசிகுமார் உள்பட 5 பேரும் பொன்னுரங்கபுரத்தில் காவிரி ஆற்று கரையோரம் காரை நிறுத்திய இடத்தின் அருகிலேயே இங்கு புதைக்குழி உள்ளது என்றும், பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் காரை நிறுத்திவிட்டு அங்கு சமைக்க சென்றபோது, அதனை பார்த்த அந்த பகுதி மக்கள், இது ஆபத்தான இடம் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் அவர்களோ, நாங்கள் குளிப்பதற்காக செல்லவில்லை. சமைக்க தான் செல்கிறோம் என்று கூறிவிட்டு சென்றதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர்.
திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்றில் சசிகுமார், சசி, விக்னேஷ் ஆகிய 3 பேரும் மூழ்கிய இடம் மிகவும் ஆபத்தான பகுதியாகும். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அதே இடத்தில் தான் காவிரி ஆற்றுக்குள் இறங்கி குளித்து கொண்டு இருந்த 4 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதனை தொடர்ந்தே அந்த இடத்தில் புதைக்குழி உள்ளது என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. அந்த எச்சரிக்கை பலகையை ஏற்கனவே அதே இடத்தில் இறந்த 4 பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து தான் வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று பகல் காவிரி ஆற்று தண்ணீரில் 3 பேரும் மூழ்கிய இடத்தில் ஏற்கனவே மணல் குவாரி இருந்துள்ளது. அந்த மணல் குவாரியை சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மூடி உள்ளனர். குவாரி செயல்பட்ட போது, உள்ளே லாரிகள் செல்வதற்காக மண் பாதை அமைத்து இருந்தனர். அந்த மண் பாதை மூடப்படவில்லை. அந்த பாதை காவிரி ஆற்றுக்குள் சிறிது தூரம் செல்கிறது. இதனால் தான் காரில் வந்த 5 பேரும், அங்கு சமைத்துள்ளனர். அங்கு மண்பாதை இருப்பதால் தான் பலர் ஆபத்தை உணராமல் அதில் இறங்கி நடந்து சென்று ஆற்றில் குளித்து வருகிறார்கள்.
எனவே அந்த பாதையை அகற்ற வேண்டும் என்று பொன்னுரங்கபுரம் பகுதி மக்கள் நேற்று மாலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மண்பாதையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். அதன்பிறகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்கள் அங்கிருந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.