திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர்,
கோவில் சொத்துகளை கோவிலுக்கே வழங்க வேண்டும், தமிழக அரசு அறநிலையத்துறை ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நேற்று காலை திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்து முன்னணி நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் கோஷமிட்டபடி வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேவுகன், கோட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், போக்குவரத்து போலீசாருக்கும் அந்த பகுதியில் நின்று கொண்டு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.