நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 30 July 2018 4:45 AM IST (Updated: 30 July 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.150 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது. இதை தடுப்பதற்காக ரூ.150 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆங்கில வழிக்கல்வி கற்க தனியார் பள்ளி மோகம் இன்னும் உள்ளதால் அதை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 50 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையில் ஆங்கில வகுப்பறைகள் அமைத்து கொள்ளலாம் என்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. ஆகவே வரும் காலங்களில் ஆங்கில வகுப்பறை ஒன்று இருந்தால் அதை 2–ஆக மாற்றிக்கொள்ளலாம்.

மாணவர்களின் எதிர்காலத்தை மனதிலே கொண்டு மிக விரைவில் 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். அகாடமி உருவாக்கப்பட உள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.ஏ. எனப்படும் பட்டய படிப்பாளர் பயிற்சி இந்த ஆண்டு 25 ஆயிரம் மாணவர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை 500 பட்டய படிப்பு பயிற்றுனர்கள் (ஆடிட்டர்கள்) வருகிற டிசம்பர் மாதத்திற்கு முன்பு 10 நாட்கள் அளிப்பார்கள். நீட் தேர்வுக்காக அடுத்த வாரம் இறுதிக்குள் 412 மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பு கொண்டு வருவதற்கும், 9, 10, 11, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனைத்தும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு இன்டர்நெட் மூலமாக செய்திகளை தெரிந்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் வருகை பதிவு பயோ மெட்ரிக் முறையில் மாற்றப்படும். இதன் மூலம் ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்வார்கள்.

தமிழகத்தில் 32 நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கப்பட உள்ளது. சிந்து வெளி நாகரிகங்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சிவகங்கையில் நூலகங்கள் அமைக்கப்பட்டு பழங்கால பொருட்கள் அங்கு வைக்கப்பட உள்ளது. இதற்காக நிலமும், ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story