காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் இன்று வருகை


காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் இன்று வருகை
x
தினத்தந்தி 30 July 2018 3:00 AM IST (Updated: 30 July 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

தேவாரம் வனப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட, டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் இன்று (திங்கட்கிழமை) தேவாரத்துக்கு வந்து சேருகின்றன.

ஆனைமலை,


தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக காட்டுயானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதோடு மட்டுமின்றி வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இந்த காட்டுயானையின் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.

அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, கும்கி யானைகளை பயன்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவை மாவட்டம் டாப்சிலிப் வனத்துறையிடம் கும்கி யானைகளை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, டாப்சிலிப்பில் உள்ள கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகளை தேவாரத்துக்கு அனுப்ப முடிவு செய்தார்.

அதன்படி வனச்சரகர் நவீன் மேற்பார்வையில் 2 கும்கி யானைகள் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் இருந்து நேற்று மாலை தனித்தனி லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தேனிக்கு புறப்பட்டு சென்றன. இதுகுறித்து டாப்சிலிப் வனச்சரகர் நவீன் கூறியதாவது:-

தேனியில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து டாப்சிலிப்பில் உள்ள 2 கும்கி யானைகள் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. யானைகளுடன் பாகன்களும், உதவியாளர்களும் செல்கின்றனர். அங்கு அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டு யானைகளை கட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் இவ்விரு கும்கிகளும் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். டாப்சிலிப்பில் இருந்து லாரிகளில் புறப்பட்ட 2 கும்கி யானைகளும் இன்று (திங்கட்கிழமை) தேவாரத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story