குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 July 2018 3:00 AM IST (Updated: 30 July 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பொது குழாய்களில் குடிநீர் பிடித்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஊராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி வீடுகளில் கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒருநபர் மட்டும் குடிநீர் இணைப்பை துண்டிக்காமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த குடிநீர் குழாயை அகற்ற வேண்டும் என்று ஊராட்சி குடிநீர் தொட்டி ஆபரேட்டர் கூறியும் அவர் அகற்றவில்லை. இதனால் ஆபரேட்டர் மின்மோட்டாரை இயக்காமல் குடிநீர் வினியோகத்தை நிறுத்தினார். இதையடுத்து குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் குடிநீர் கேட்டு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேடசந்தூர் - வடமதுரை ரோட்டில் ஸ்ரீராமபுரத்தில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இதன் பிறகு ஆபரேட்டர் குடிநீரை வினியோகம் செய்யும் மின்மோட்டாரை இயக்கியதால் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story