அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், கழிப்பறை வசதி பொதுமக்கள் கோரிக்கை


அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், கழிப்பறை வசதி பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 July 2018 3:15 AM IST (Updated: 30 July 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செந்துறை,


நத்தம் தாலுகாவில் உள்ள செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 246 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உடற்கல்வி ஆசிரியர், கணினி அறிவியல் ஆசிரியர், மரவேலை ஆசிரியர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. பாடம் சொல்லித்தருவதற்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ-மாணவிகள் அவர்களே சுயமாக படித்து பல வருடங்களாக தேர்வு எழுதிவருகின்றனர்.

தற்போது பிளஸ்-2 வகுப்பில் கணினி அறிவியல், கணிதவியல், அறிவியல் என 3 பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளது. இங்கு புதிதாக பாடப்பரிவுகள் தொடங்கப்பட வேண்டும். இந்த பள்ளிக்கு அலுவலக உதவியாளர்கள், காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உயிரியல் ஆய்வக(லேப்) வசதி இல்லை.

9, 10-ம் வகுப்பு அறிவியல் ஆய்வக கட்டிடத்தில் தரைப்பகுதி பெயர்ந்து போய் உள்ளது. இதனால் மாணவர்கள் நடக்கும் போதும், காற்று அடிக்கும் போதும் வகுப்பறையில் தூசி வருகிறது. சில வகுப்பறைகள் மிகவும் பழைய கட்டிடத்தில் இயங்குகிறது.

செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்திற்குள் இரவு நேரங்களில் சிலர் மது அருந்தி வருகின்றனர். மேலும் மது அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விடுகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்தில் சிலர் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கார் ஓட்டி பழகுகின்றனர். இதனால் வகுப்பறையில் படிக்கும் மாணவ-மாணவிகளின் முழுகவனமும் மைதானத்தை நோக்கி திரும்புவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டிட வசதி இல்லை. எனவே கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் இங்கு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக ஒரு கழிப்பறைதான் உள்ளது. எனவே மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள், சுற்றுச்சுவர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story