ஏ.டி.எம். மையத்துக்கு வந்த வாலிபரிடம் ரூ.30 ஆயிரம் அபேஸ்
திருக்கோவிலூரில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வந்த வாலிபரிடம் உதவி செய்வதுபோல் நடித்து மர்மநபர்கள் 2 பேர் ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்து உள்ளனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் கீழையூர் தாசர்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(வயது 30). சம்பவத்தன்று இவரிடம் அவரது சகோதரி மகள் ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து செலவுக்காக ரூ.2 ஆயிரம் எடுத்து வருமாறு கூறினார். இதையடுத்து ஜெயசீலன் ஏ.டி.எம். கார்டுடன் பணம் எடுப்பதற்காக திருக்கோவிலூர் மேலவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அவருக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால், அங்கிருந்த நபர் ஒருவரிடம் ரூ.2 ஆயிரம் எடுத்து கொடுக்கும்படி கேட்டதோடு, அவரிடம் ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணையும் கூறினார்.
இதையடுத்து அந்த நபர் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் பயன்படுத்திவிட்டு, பணம் வரவில்லை என கூறியதோடு, அடுத்த சில நொடிகளில் தன்னுடன் வந்த நண்பர் ஒருவரிடம் அந்த ஏ.டி.எம். கார்டை கொடுத்து அருகில் உள்ள வேறு ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுத்து கொடுக்குமாறு கூறினார்.
இதையடுத்து அந்த நபரின் நண்பர் ரூ.2 ஆயிரத்தை வேறு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எடுத்து ஜெயசீலனிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற ஜெயசீலன் அங்கிருந்து வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த சகோதரியின் மகள் தனது செல்போன் எண்ணுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரமும், மறுமுறை ரூ. 30 ஆயிரமும் எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது என கூறியுள்ளார்.
அப்போது தான் அங்கு இருந்த மர்மநபர்கள் 2 பேர் உதவி செய்வதுபோல் நடித்து, 2 எந்திரங்களில் ஏ.டி.எம். கார்டை மாற்றி, மாற்றி போட்டு தனது கவனத்தை திசை திருப்பி ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டது ஜெயசீலனுக்கு தெரியவந்தது. உடன் இது குறித்து அவர் திருக்கோவிலூர் போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருக்கோவிலூரில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை குறிவைத்து மர்மநபர்கள் சிலர் பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து மோசடியில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே இதுபோன்று மோசடியில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்டறிந்து உடனடியாக கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருக்கோவிலூர் நகர மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story