சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தால் படகுகள் பறிமுதல்


சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தால் படகுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 July 2018 3:15 AM IST (Updated: 30 July 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படும். இந்த அதிரடி நடவடிக்கை நாளை மறுநாள் முதல் தொடரும் என்று மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலூர் முதுநகர்,



கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பம் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த மோதலை தடுக்க போலீசார், மீன்வளத்துறையினருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.

மேலும் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஒரு சில மீனவ கிராமத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனாலும் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இது தொடர்பாக மீன்வளத்துறையினருடன் கடலூர் சப்-கலெக்டர் சரயூ ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களிடம், நாளை மறுநாள் முதல் (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கக்கூடாது,

மேலும் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளையும் இயக்கக்கூடாது என்று ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் மேற்பார்வையில் ஆய்வாளர் மனுநீதி சோழன், மேற்பார்வையாளர் அறிவுவேந்தன் ஆகியோர் அறிவிப்பு செய்தனர்.

இது பற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள 171 விசைப்படகு மீனவர்கள் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை, அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளில் மீன்பிடிக்க செல்கிறார்களா? என்பதை நாளை மறுநாள்(புதன்கிழமை) சப்-கலெக்டர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆகவே அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு வலைகளை பயன்படுத்தக்கூடாது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மீனவர்கள் தங்கள் படகுகளில் உயிர் காப்பு சாதனங்களை எடுத்து செல்ல வேண்டும்.

விசைப்படகுகள் கரையில் இருந்து 5 கடல் மைல் தூரத்துக்குள் மீன்பிடி தொழில் செய்யக்கூடாது. கடலூர் துறைமுகம் மற்றும் இதர மீன்பிடி இறங்கு தளங்களில் வைக்கப்பட்டுள்ள சுருக்கு வலைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு செய்துள்ளோம்.

இந்த அறிவிப்பை மீறி சுருக்கு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தி மீன்பிடித்தாலோ அல்லது துறைமுகத்தில் வைத்திருந்தாலோ வலைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகுகளும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றனர். 

Next Story