தமிழகத்தில் 49½ லட்சம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


தமிழகத்தில் 49½ லட்சம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 30 July 2018 3:45 AM IST (Updated: 30 July 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 49½ லட்சம் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை கணக்கெடுப்பு பணி தொடக்க விழா, தூய்மை கணக் கெடுப்பு சின்னம் அறிமுக விழா, தூய்மை ரதம் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற் றது. இதற்கு ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். இதில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தூய்மை பணி சின்னம் மற்றும் கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–

மத்திய அரசு நாடு முழுவதும் தூய்மை கணக்கெடுப்பு நடத்தி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை தர வரிசைப்படுத்த உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1–ந் தேதி தொடங்கி 31–ந் தேதி வரை நடக்கிறது. கணக்கெடுப்பின் போது பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார வளாகங்கள், கிராமச் சந்தை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்படும்.

மேலும் பொது மக்களிடம் கிராமத்தின் தூய்மைநிலை, கழிவறை பயன்பாடு, குப்பைகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்படும். இதுதவிர தூய்மை பாரத இயக்கத் தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் அடைந்த சாதனைகளின் அடிப்படையில், இந்த தர மதிப்பீடு செய்யப்படும்.

தமிழகத்தை முழு சுகாதாரம் பெற்ற மாநிலமாகவும், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற மாநிலமாகவும் உருவாக்கிட 2013–ம் ஆண்டு முதல் இதுவரையில் 49 லட்சத்து 63 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் ரூ.4 ஆயிரத்து 639 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை 30 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங் களையும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 12 ஆயிரத்து 40 கிராம ஊராட்சிகள் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக கிராமசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் முதல் முறையாக தமிழகத்தில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் ரூ.610 கோடி செலவில் கடந்த 2014–ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் 66 ஆயிரத்து 25 தூய்மை காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் கிராமப்புறங்களில் குப்பைகளை அகற்ற 93 ஆயிரம் குப்பை தொட்டிகளும், 43 ஆயிரம் மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story