தீபம் ஏற்றும் மலையில் விடிய, விடிய தவித்த ரஷிய நாட்டுக்காரர் மீட்பு


தீபம் ஏற்றும் மலையில் விடிய, விடிய தவித்த ரஷிய நாட்டுக்காரர் மீட்பு
x
தினத்தந்தி 30 July 2018 3:30 AM IST (Updated: 30 July 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் மலையில் வழி தெரியாமல் விடிய, விடிய தவித்த ரஷிய நாட்டுக்காரரை போலீசார் மற்றும் வனத்துறையினர் மீட்டனர்.

திருவண்ணாமலை,


தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் திருவண்ணாமலை ஒன்றாக உள்ளது. இங்கு அருணாசலேஸ்வரர் கோவில், ரமணாஸ்ரமம், கந்தாஸ்ரமம் போன்றவை உள்ளன. திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் மகா தீபத்தன்று தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள மலை உள்ளது.

இந்த மலையில் பல்வேறு குகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மலையில் ஏறக் கூடாது என்று வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை சுமார் 8 மணியளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் ரஷிய நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் (வயது 50) என்றும், திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படும் மலையில் வழிதவறி மாட்டிக் கொண்டதாக ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மலையில் தேடினர். அதன்பிறகு இருள் சூழ்ந்ததால் போலீசாரும், வனத்துறையினரும் கீழே இறங்கி வந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று காலையில் மீண்டும் போலீசாரும், வனத்துறையினரும் மலையில் ஏறி ரஷிய நாட்டுக்காரரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 1.45 மணியளவில் அந்த ரஷிய நாட்டை சேர்ந்த நபர் மலையின் உச்சியில் வடக்குப் பகுதியில் இருப்பது தெரியவந்தது. விடிய விடிய திரும்ப முடியாமல் தவித்த அவரை போலீசார் மற்றும் வனத்துறையினர் மீட்டனர். பின்னர் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், குகைகளை பார்க்க வந்தபோது வழி தவறியதாக கூறியுள்ளார். பின்னர் போலீசார் மற்றும் வனத்துறையினர் கரடுமுரடான பாதை வழியாக மாலை சுமார் 7 மணியளவில் அவரை கீழே அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை முதலுதவி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story