சிங்கப்பூர், தனியார் நிறுவன கப்பலில் வேலைபார்த்த வாணியம்பாடி தொழிலாளி மர்ம சாவு


சிங்கப்பூர், தனியார் நிறுவன கப்பலில் வேலைபார்த்த வாணியம்பாடி தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 30 July 2018 3:30 AM IST (Updated: 30 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவன கப்பலில் வேலைபார்த்த வாணியம்பாடி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் அவரது மனைவி மனு அளித்தார்.

வேலூர்,


வாணியம்பாடியை அடுத்த ஓமகுப்பத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 33). இவருடைய மனைவி வித்யா (27). இவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் அசோகன் கடந்த மே மாதம் 18-ந் தேதி சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் மோட்டார் இயக்கும் வேலைக்கு 9 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற சென்றார். மே 20-ந் தேதி பணியில் அவர் சேர்ந்து விட்டதாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் எனக்கு தகவல் அனுப்பினார். அதன் பின்னர் தினமும் செல்போன் மற்றும் ‘வாட்ஸ்-அப்’ பில் பேசி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி எனது கணவர் செல்போனில் பேசினார். அப்போது அவர் “கப்பலில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. அதனை தட்டிக்கேட்டபோது என்னை சிலர் மிரட்டுகின்றனர்” என்று தெரிவித்தார். அதற்கு நான், வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்துவிடுமாறு கூறினேன். அதற்கு அவர் ஒப்பந்த காலம் முடியாமல் அனுப்ப மாட்டார்கள் என்று கூறினார். எனது கணவர் கடந்த 14-ந் தேதி கடைசியாக என்னிடம் பேசினார். அதன் பின்னர் அவருடைய செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதற்கிடையே கடந்த 17-ந் தேதி எனது கணவருடன் பணிபுரியும் ஒருவர் என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு, “அசோகன் கப்பலிலேயே தற்கொலை செய்து கொண்டார். தற்போது கப்பல் வெகு தொலைவில் இருப்பதால் 20-ந் தேதி தென்ஆப்பிரிக்கா நாட்டுக்கு வரும். அங்கிருந்து 4 நாட்களில் விமானம் மூலம் உடல் மும்பைக்கு கொண்டு வரப்படும். அங்கு வந்து உடலை பெற்று கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், அவர் எப்படி உயிரிழந்தார் என்று கேட்டபோது எந்த தகவலும் தெரிவிக்காமல் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மும்பையை சேர்ந்த ஒருவர், எங்கள் கிராமத்துக்கு வந்து எனது கணவர் மற்றும் குடும்பம் பற்றி விசாரித்து விட்டு சென்றுள்ளார். ஆனால் அவர், என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

எனது கணவர் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் மற்றும் மர்மம் உள்ளன. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழையல்ல. கப்பலில் நடக்கும் தவறுகள் பற்றி அவர் என்னிடம் பேசியுள்ள ஆடியோ ஆதாரம் உள்ளன. எனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

எனவே எனது கணவர் மரணத்துக்கான காரணத்தையும், அதற்கு காரணமானவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவர் உடலை விரைவாக கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.


இது குறித்து இந்திய தூதரகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் மூலம் விசாரித்து, அசோகன் உடல் அவரது ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவரது உடல் கொண்டு வரப்படும் என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story