வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது
ஆம்பூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளின் மேற்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து உள்ளே விழுந்ததில் 2 குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஆம்பூர்,
ஆம்பூர் பூந்தோட்டம் பகுதி அருகே வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
குறைந்த, நடுத்தர, உயர்ந்த வருவாய் பிரிவு என 3 பிரிவுகள் அடிப்படையில் சுமார் 600 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் குறைந்த வருவாய் பிரிவில் 250 வீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து, மேற்பகுதியில் கான்கிரீட் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து வருகிறது.
சுவர்களின் சிமெண்டு பூச்சும் பெயர்ந்து விழுகிறது. இதனால் சேதமடைந்து வரும் கட்டிடங்களை சீரமைத்து தருமாறு அங்கு வசிக்கும் பொதுமக்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பல ஆண்டுகளாக பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறைந்த வருவாய் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் கூலி தொழிலாளி ஜான்பாஷா என்பவர் வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் மேற்கூரையின் கான்கிரீட் திடீரென பெயர்ந்து விழுந்தது. வீட்டின் பல இடங்களிலும் இதேபோல் பெயர்ந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த ஜான்பாஷாவின் மகன் சுஹேல் (வயது 8), மகள் சித்திகா (6) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 2 பேரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் ஜான்பாஷா உள்பட சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பலத்த சேதம் ஏற்படும் முன்பு அதை சீரமைத்து தர வேண்டுமென குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story