தமிழ்நாட்டில் முதல்முறையாக குடியாத்தத்தில் மகளிர் நூலகம் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு


தமிழ்நாட்டில் முதல்முறையாக குடியாத்தத்தில் மகளிர் நூலகம் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 30 July 2018 3:30 AM IST (Updated: 30 July 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட தலைநகரத்திற்கு வெளியே தமிழ்நாட்டில் முதல்முறையாக குடியாத்தத்தில் மகளிர் நூலகம் அமைந்துள்ளது என்று அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

குடியாத்தம்,


குடியாத்தம் பிச்சனூர் அழகுபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் புலவர் கா.நடராஜன் (வயது 89), ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இவரது தந்தை காளியப்ப முதலியார் சுதந்திர போராட்ட தியாகி. கா.நடராஜன் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தான் வாழ்ந்த வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளிர் நூலகம் அமைப்பதற்கு தானமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.

இதனையடுத்து தற்போது குடியாத்தம் காளியம்மன்பட்டி கந்தசாமிநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கா.நடராஜன் நூலகத்திற்கு தானமாக வழங்கிய வீட்டில் நேற்று மகளிர் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் எஸ்.ஏ.ராமன் தலைமை தாங்கினார். ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ., பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.என்.பழனி, முன்னாள் நகரசபை தலைவர்கள் எம்.பாஸ்கர், எஸ்.அமுதா, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வி.ராமு, அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் டி.சிவா, கே.எம்.ஐ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் க.ஆனந்தன் வரவேற்றார்.

கே.எம்.ஜி. கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு வக்கீல் கே.எம்.பூபதி, வாசகர் வட்ட தலைவர் முல்லைவாசன், புலவர் செந்தமிழ்கூத்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் நூலகத்தை திறந்து வைத்து, கட்டிடத்தை நன்கொடையாக வழங்கிய ஆசிரியர் நடராஜனை பாராட்டி பேசினர்.

அப்போது அமைச்சர் வீரமணி பேசியதாவது:-

குடியாத்தத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மகளிர் நூலகம் உள்ளது. மாவட்ட தலைநகரத்திற்கு வெளியே தமிழ்நாட்டில் முதல்முறையாக குடியாத்தத்தில் மகளிர் நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நூலகத்தை இப்பகுதியில் உள்ள பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் பி.எஸ்.கோபி, நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ், அ.தி.மு.க. நிர்வாகிகள் தனஞ்செயன், சிவக்குமார் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர்கள் மதன், ரவி ஆகியோர் நன்றி கூறினர். 

Next Story