குற்றாலம் சாரல் திருவிழாவில் மலர் கண்காட்சி
குற்றாலம் சாரல் திருவிழாவில் நேற்று மலர் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மலர் கண்காட்சியை திறந்து வைத்தார்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று தோட்டக்கலை துறை சார்பில், குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஷில்பா வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ‘ரிப்பன்‘ வெட்டி கண்காட்சியை திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சியில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, கசகசா, வெந்தயம், மல்லி ஆகிய நறுமண பொருட்களால் ஆன தாஜ்மகால், 15 ஆயிரத்து 500 சிகப்பு மற்றும் வெள்ளை ரோஜா பூக்களால் ஆன டிராக்டர் வடிவம், பூக்களால் ஆன ஜல்லிக்கட்டு காளை, நடன மங்கைகள், மங்கள வாத்திய இசை பெண்கள், கிராமபோன், மிக்கி மவுசு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல், பெங்களூரு, ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கார்னேசன், ஜெர்புரா, ஆஸ்டர், கிரைசாந்திமம், ரெசினா, துரண்டா ஆகிய மலர்களால் ஆன பூங்கொத்துகளும், பல்வேறு அரியவகை மலர்களும் இடம்பெற்று உள்ளன.
காய்கறிகளால் ஆன டிராகன், மீன், மயில், மான், குரங்கு, கோழி, முதலை, அணில், பட்டாம் பூச்சி, கடல் குதிரை, நெருப்புக்கோழி, பருந்து, குதிரை, சேவல், எருமை, அன்னப்பறவை ஆகியவையும் இடம்பெற்று உள்ளன. நுழைவு வாசலில் பழங்களால் ஆன ஆர்ச் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த விளக்க படங்கள், தோட்டக்கலை பயிர்களுக்கான உரங்கள், ஒட்டுக்கன்றுகள், தொழில்நுட்பங்களுக்கான மாதிரிகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், அதன் சார்ந்த தொழில்நுட்பங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ளன. மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில், ராக்கெட்டுகள் மாதிரி அணிவகுப்பு, ஒளி, ஒலி கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30-ம், சிறியவர்களுக்கு ரூ.15-ம் வசூலிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story