5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் கொள்முதல் பணிக்காக காத்திருக்கும் விவசாயிகள்


5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் கொள்முதல் பணிக்காக காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 29 July 2018 10:45 PM GMT (Updated: 29 July 2018 9:44 PM GMT)

திருவிடைமருதூர் அருகே அம்மன்குடியில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. அங்கு உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது அம்மன்குடி. இங்கு உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு அம்மன்குடி கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கொள்முதல் பணி எப்போது தொடங்கும் என காத்திருக்கிறார்கள்.

கொள்முதல் பணி நடக்காததால் அங்கு 5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டபோது, சாக்குகள் இல்லை, பணியாளர்கள் இல்லை என அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விற்பனை செய்ய விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட நெல், கொள்முதல் நிலையம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பலர் கொள்முதல் பணிக்காக நிலையம் முன்பு காத்திருக்கிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நடப்பு பருவத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை தற்போது திறந்து, கொள்முதல் பணிகளை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் சாக்குகள் தட்டுப்பாடு இருப்பதாகவும், பணியாளர்கள் இல்லை என்றும் கூறி அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை இதுவரை திறக்கவில்லை. இதனால் நெல் கொள்முதல் நிலையம் முன்பாக காத்திருக்க வேண்டி உள்ளது. கொள்முதல் நடக்காததால் சாகுபடி பணிக்காக வாங்கிய கடனை அடைக்க என்ன செய்வதென தெரியவில்லை.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story