வேலூரில் இரவு 9 மணிமுதல் பஸ்கள் நிறுத்தம்; பயணிகள் அவதி


வேலூரில் இரவு 9 மணிமுதல் பஸ்கள் நிறுத்தம்; பயணிகள் அவதி
x
தினத்தந்தி 30 July 2018 5:29 AM IST (Updated: 30 July 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வந்த தகவல்களை தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இரவு 9 மணி முதல் பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வேலூர்,


தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள். கருணாநிதியின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள அங்கு தி.மு.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் மாவட்டத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்பேரில் இரவு 9 மணிக்கே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரவு ஒரு சில கடைகளே திறந்திருந்தன. அந்த கடைகளையும் இரவு 9 மணிக்கே அடைக்குமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வேலூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் சுற்றி வந்தனர். இரவு 9 மணிக்கு பிறகு பஸ் நிலையத்திற்கு வந்த அனைத்து பஸ்களும் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு டெப்போக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனால் பஸ் நிலையத்தில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வெளியூர்களுக்கு செல்ல வந்திருந்த பயணிகள் பஸ்கள் இன்றி சிரமத்திற்கு உள்ளானார்கள்.


இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று இரவு சென்ற மினி லாரி மீது சிலர் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு வந்து கல்வீசியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story