அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் முதல்வர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்


அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் முதல்வர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 30 July 2018 5:53 AM IST (Updated: 30 July 2018 5:53 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் உள்பட 10 இடங்களில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பயிற்சி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முருகபவனம்,


தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககத்தின் கீழ் சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்பட 23 இடங்களில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உள்ள இடங்களில் இந்த செவிலியர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் 3 ஆண்டுக்கான செவிலியர் பட்டய படிப்பை படித்து வருகின்றனர்.

இதனை அந்தந்த பயிற்சி பள்ளிகளின் முதல்வர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர துணை முதல்வர், செவிலியர் பயிற்சி ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.


இத்தகைய செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பயின்று வரும் மாணவிகள் நாள்தோறும் பள்ளிக்கு வருகின்றனரா?, பாடத்திட்டத்தின் படி முறையாக பாடங்கள் நடத்தப்படுகிறதா?, அவ்வாறின்றி தாமதமாக நடத்தப்பட்டால் அதனை துரிதப்படுத்துதல், தேர்வு நடத்துதல் போன்ற பணிகளை பயிற்சி பள்ளியின் முதல்வர் கண்காணிக்க வேண்டும்.

இதுதவிர மருத்துவக்கல்வி இயக்ககம் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு, அந்தந்த பயிற்சி பள்ளிக்கு என்னென்ன தேவைகள் உள்ளது?, அதற்கான நிதியை கேட்பது உள்பட ஒட்டுமொத்த நிர்வாகமும் முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இந்தநிலையில் திண்டுக்கல், மதுரை, ஊட்டி, திருச்சி, திருப்பூர், விருதுநகர், நாகப்பட்டினம், நாகர்கோவில், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 10 இடங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கடந்த 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளின் முதல்வர் பணியிடங்கள் பணிமூப்பு அடிப்படையில் நிரப்பப்படுவது வழக் கம். அந்த வகையில் இந்த மாதம் 17-ந் தேதி கிரேடு-1-க் கும், 18-ந் தேதி கிரேடு-2 செவிலியர் ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடந்தது. இதில் பலர் இடம் மாறி உள்ளனர். இருப்பினும் 10 இடங்களில் முதல்வர் பணியிடம் தற்போது காலியாக உள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பயிற்சி பள்ளிகளில் தான் அதிகளவில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் இந்த செவிலியர் பயிற்சி பள்ளிகளின் ஒட்டு மொத்த நிர்வாகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க அரசு விரைவில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அப்போது தான் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளின் தரம் மேலும் உயரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story