இன்னும் இருபது ஆண்டுகளில் வாழ்வோடு இரண்டற கலக்கப்போகும் தொழில்நுட்பங்கள்!
வரும் காலங்களில் தொழில்நுட்பங்கள் நம் வாழ்வோடு இரண்டற கலக்க இருக்கின்றன.
2040-ல் ஒரு நாள் காலையில் கண் விழிக்கிறீர்கள். உடனே தானாக ஸ்மார்ட் ஜன்னல் திறந்து கொள்ளும். ஸ்மார்ட் விளக்குகள் ஒரு செயற்கை சூரிய உதயத்தை உங்கள் கண்முன் நிகழ்த்திக் காட்டும். பின்னணியில் உங்கள் விருப்பமான இசை ஒலித்துக் கொண்டிருக்கும்.
உற்சாகமாக நீங்கள் மெத்தையைவிட்டு எழுந்து சென்று வாஷ்பேசினில் கையை நீட்டினால் மழைச் சாரல் தெளித்ததுபோல அளவாக நீர் கொட்டும். கை முகத்திற்கு செல்லும்போது தண்ணீர் துளியும் கசியாது. முகத்தை கழுவியதும் கண்ணாடியில் முகம்பார்த்தால் அது உங்களுடன் பேச ஆரம்பிக்கும். நீங்கள் சரியான நேரத்திற்கு எழும்பிவிட்டீர்களா? இன்றைய பொழுதில் எந்த நேரத்தில் என்ன வேலையை செய்ய வேண்டும்? என்பதை ஸ்மார்ட் கண்ணாடி படம்போல காட்டும். அதை அப்படியே உங்கள் மனக்கண்ணாடியில் ஓட விட்டுக் கொண்டு, குளியல் அறைக்குச் செல்லலாம்.
அங்கே ‘ஷவர்’ அளவான நீரை பன்னீர் தெளித்ததுபோல தூவும். உங்களுக்குப் பிடித்தமான வாசனைகள் கழிவறை மற்றும் குளியல் அறையில் சுழற்சி முறையில் மணம்வீசி புத்துணர்வு பரப்பும். குளித்து முடித்து நீங்கள் புத்துணர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் குளித்த மாசு கலந்த சோப்பு நீர் ரகசியமாக சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி பயன்பாட்டிற்கு தயாராகிவிடும். அது பாத்திரம் தேய்க்கவோ, வாகனம் கழுவவோ அல்லது தாவரங்களுக்கோ இதில் ஏதாவது ஒரு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.
உடை மாற்றுவதற்காக அலமாரியைத் திறந்தால் அங்கு செயற்கை அறிவு தொழில்நுட்பம், உங்கள் உடைத் தேர்வுக்கான டிப்ஸ்களை வழங்கும். நீங்கள் தேர்வு செய்யும் உடை எத்தனை நாட்களுக்கு முன்பாக அணிந்தீர்கள், அதற்கு மேட்ச்சான உடையை தேர்வு செய்கிறீர்களா என்பதை பட்டியலிடும். துவைக்காத துணிகளை துவைக்கவும், கசங்கிய துணிகளை இஸ்திரி செய்து மடிக்கவும் ஸ்மார்ட் அலமாரிகளால் மூடியும்.
ஸ்மார்ட் காபி மேக்கர் சுவைமாறாமல் உங்கள் காபி அல்லது தேனீரை தயாரித்து வழங்கும். நீங்கள் சூடாக பானம் பருகியபடி ஸ்மார்ட் பத்திரிகைகள் படிக்கலாம், எலக்ட்ரானிக் எழுத்துகளில் மனம் மயக்கும்படியான சேதிகள் காட்சிகள் மறைந்திருந்து கண்முன் விரிந்து உங்களை வியக்க வைக்கும். அது அலாவுதீன் பூதம் பத்திரிகையில் டி.வி. நிகழ்ச்சியை காண்பிப் பதைப்போல நீங்கள் உணரலாம். தேவையான செய்தியை உங்கள் டிரைவில் சேமிக்கலாம், விருப்பமானவர்களுக்குப் பகிரலாம். இதை நேற்றே எங்கேயோ படித்தோமே என்று இணையதள கில்லாடிகள் சிலாகித்துச் சொல்லலாம்.
சின்னச்சின்ன வேலைகளை முடித்துவிட்டு, நீங்கள் ஸ்மார்ட் கிச்சனில் நுழைந்தால், பல அதிசயங்கள் காத்திருக்கும். முக்கியமாக பாத்திரம் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் அவை தானியங்கி முறையில் சுத்தமாக கழுவி அடுக்கப்பட்டிருக்கும் என்பதால் இல்லத்தரசிகள் எரிச்சல்பட வேண்டியிருக்காது. காபித்தூள் காலி, சர்க்கரை தீரப்போகுது, நாலு நாட்களுக்கு முன்பு வாங்கிய பழம் அழுகப்போகிறது என்பது போன்ற எச்சரிக்கை பட்டியல் ஒருபுறம் இருக்கும். அதனால் தன் மறதியை மறந்து, கணவரை கரிச்சுக் கொட்டாமல் தேவையான பட்டியலை, நமது ஸ்மார்ட் அங்காடிக்கு ஒரு ‘ஆர்டர்’ போட்டு விடலாம்.
நீங்கள் இன்றைய தினம் ருசிக்க வேண்டிய மெனுவை ஏற்கனவே கொடுத்திருந்தால், அதை தயார் செய்யவா? என்ற கேள்வியுடன் அடுப்பு முதல் கத்திவரை அனைத்தும் தயார் நிலையில் காத்திருக்கும். நீங்கள் பொத்தானை அழுத்தினால் ஒருபுறம் காய்கறி நறுக்கப்படும், மறுபுறம் அடுப்பு எரிய ஆரம்பித்து, எண்ணெய் காய வைப்பது, வென்னீர் தயாரிப்பது என பணியை ஆரம்பித்துவிடும். உப்பு போட மறந்தோம், காரம் அதிகமாகிவிட்டது என்ற குழப்பம் இல்லாமல், ஒரு கை தேர்ந்த ‘செப்’ போல, நேரம் வீணாகாமல் சூடாக சமைத்து, ஸ்மார்ட் தட்டில் கொட்டி வைக்கும்.
அந்த ஸ்மார்ட் தட்டு எவ்வளவு எடையுள்ள, எவ்வளவு கலோரிகள் கொண்ட உணவை உண்ணப்போகிறீர்கள் என்பதை உங்கள் ஸ்மார்ட் கடிகாரத்தில் காட்டிவிடும். நீங்கள் செய்த உடற் பயிற்சியால் எரிக்கப்பட்ட கலோரிகள், நீங்கள் ஸ்மார்ட் கழிவறையில் கழிந்த ஆற்றல் ஆகியவற்றுக்கு ஏற்ப என்னென்ன சாப்பிட்டால் உடலுக்கு ஏற்றது என்று ஒரு பட்டியலும் தயாரிக்கப்படும். அதை சாப்பிட விரும்பினால், ஸ்மார்ட் கிச்சனுக்கு அதை தயாரிக்க ஆர்டர் கொடுக்கலாம்.
சாப்பிட்டு முடித்ததும் அலுவலகம் கிளம்பினால் உங்கள் பறக்கும் பைக் தயாராக நிற்கும் அல்லது தானியங்கி கார் வரவேற்கும். டிராபிக் ஜாம் இல்லாமல் சீரான வேகத்தில் உங்கள் அலுவலகத்தை எட்டிவிடலாம். காலதாமதமாகும் என்பது கணிக்கப்பட்டால் முன்கூட்டியே டேஷ்போர்டில் தெரிவிக்கப்பட்டுவிடும். விபத்துகள் பெரும்பாலும் குறைக்கப்படும். மனிதர்களே இயக்கும் வாகனங்களை தடை செய்யலாமா என்று அரசாங்கம் பரிசீலிக்கும்.
ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட் கடிகாரம் வழியாக செயல்படும். இன்னும் சிலர் எலக்ட்ரானிக் டாட்டூ வடிவிலும், சட்டைப் பொத்தானில் இருந்து கிளம்பும் ஒளி மூலம் செல்போன் வசதிகளை இயக்குவார்கள்.
உடலில் பொருத்திக் கொள்ளும் அல்லது உடலுக்குள் இணைக்கப்பட்ட சிப் மூலமாகவும் பல்வேறு சேவைகள் செயல்படும். சாப்பிடும் நேரம், மாத்திரை விழுங்கும் நேரம், தூங்கும் நேரம் எல்லாம் எலக்ட்ரானிக் சமிக்கைகளாக ஸ்மார்ட்கடிகாரத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். கருவிகளை சார்ஜ் செய்ய மறப்பது, ஆன்செய்ய மறப்பது மட்டுமே நமது மறதிகளாக இருக்கும். மற்ற விஷயங்களை கருவிகளே ஞாபகப் படுத்திவிடும்.
சாவிக்கொத்து எங்கே உள்ளது என்பதை ‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ மூலம் கண்டுபிடித்துவிடலாம். திருட்டு பேர்வழிகள் நடமாட்டம் குறைந்துவிடும். திருடப்பட்டால் கத்தி கூப்பாடு போடும் ஸ்மார்ட் வாலட்கள் (பர்ஸ்கள்) நமது பண அட்டைகளை பாதுகாக்கும். பணப்பரிமாற்றங்கள் இ-பணப்பரிமாற்றத்துக்கு மாறிவிடும்.
வீட்டைவிட்டு வெளியே வந்ததும் தானாக கதவுகள் பூட்டிக் கொள்ளும். அணைக்க மறந்த விளக்குகள், டி.வி. எல்லாம் தானியங்கி முறையில் அணைக்கப்பட்டுவிடும். ஜன்னல் முதல் அனைத்தும் சாத்தப்பட்டு, பூனை முதல் திருடர்கள் வரை யார் நுழைந்தாலும் ஸ்மார்ட் கேமராக்கள், பாதுகாப்பு டிரோன்கள் கண்காணித்துக் கொண்டிருக்கும்.
ஆர்டர் கொடுத்த பொருட்களை நாம் அலுவலகத்தில் இருக்கும்போதே, கதவைத் திறந்து உள்ளே வைத்துவிட்டுச் செல்லவும், அவர்களை கண்காணிக்கவும் அப்ளிகேசன்களும், ஸ்மார்ட்பூட்டுகளும் இருக்கும். அதை விரும்பாதவர்கள் பால் பெட்டி போல, வீட்டிற்கு வெளியே ஸ்மார்ட் டெலிவரி பெட்டிகளை வைத்துவிடலாம்.
வயதானவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமலே பணிப்பெண் ரோபோவை வாங்கி பத்திரமாக பெரியவர்களை கவனிக்க வைத்துவிடலாம். மாடிப்படியேற சிரமப்பட்டால் நம்மை சுமந்து செல்ல இந்த ரோபோக்களுக்கு கட்டளை கொடுக்கலாம். இணையத்தில் உலவி இன்றைய வைரல் செய்திகளை படித்துச் சொல்ல வைக்கலாம். மனைவி செய்து கொடுப்பதில் முக்கால் பங்கு வேலைகளை இந்த ரோபோக்கள் நமக்கு செய்து கொடுக்கும். கொஞ்சம் அசந்தால் நாம் நினைப்பதைக்கூட மனைவியிடம் போட்டுக் கொடுக்கவும் செய்துவிடும் இந்த செயற்கை அறிவு ரோபோக்கள்.
பூமியைக் காலி செய்துவிட்டு செவ்வாயில் குடியேறுவது பலரின் ஆசையாக இருக்கும். ‘அட்லிஸ்ட்’ நிலவுக்காவது ஒரு டிரிப் அடித்து வரவேண்டும் என்பது பல குடும்பஸ்தர்களின் கோடை சுற்றுலா திட்டமாக மாறியிருக்கும். வீட்டில் படுக்கையறை, சமையல் அறைபோல, விவசாய அறை கட்டாயத் தேவையாகி இருக்கும். மொட்டைமாடியோ, தனி அறையோ நமக்குத் தேவையான அடிப்படை காய்கறிகளை நாமே விளைவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். அதற்குத் தேவையான செயற்கை சூரிய ஒளி, தண்ணீர் வினியோக கட்டுப்பாட்டு கருவி, உரமிடும் கருவி எல்லாம் உங்கள் விரல் நுனி அப்ளிகேசன் வழியே இயக்க வேண்டியதிருக்கும்.
இப்படியாக நம்மோடு இரண்டற கலக்க இருக்கின்றன தொழில்நுட்பங்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த தொழில்நுட்ப வசதிகள் வெகுசீக்கிரம் வந்துவிடும். நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த வசதிகள் எல்லாம் வந்துசேர சில பத்தாண்டுகள் முன்னே பின்னே ஆகலாம்!
Related Tags :
Next Story