தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு இல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு இல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 31 July 2018 3:00 AM IST (Updated: 31 July 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் நேற்று மதியம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம் உள்ளிட்ட அமிலங்கள் 99 சதவீதம் அகற்றப்பட்டு உள்ளது. ஜிப்சம், ராக்பாஸ்பேட், தாமிர தாது ஆகியவை அதிக அளவில் உள்ளன. இதுவரை ஜிப்சம் 40 ஆயிரம் டன், ராக்பாஸ்பேட் 20 ஆயிரம் டன் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதே போன்று தாமிர தாது வாங்கக்கூடிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பணிகளில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 200 பேர் 3 ஷிப்ட்களில் வேலை பார்த்து வருகின்றனர். ஜிப்சம், ராக்பாஸ்பேட் ஆகியவற்றை அப்புறப்படுத்த அதிக நாள் தேவைப்பட்டால், அரசிடம் தெரிவித்து உரிய அனுமதி பெறப்படும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மாவட்ட நிர்வாகத்தின் முடிவு கிடையாது. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி தான் ஆலை மூடப்பட்டு உள்ளது. ஆலை தரப்பினர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதாக கூறுவது, வேறு அர்த்தத்திலோ அல்லது தெரியாமலோ கூறி இருக்கலாம். ஆனால் அரசு முடிவுப்படி ஆலையை மூடிவிட்டோம். இனிமேல் அதனை மீண்டும் திறக்க மாட்டோம் என்று தெளிவாக அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் ஆலைக்கு மின் இணைப்பு கூட கொடுக்கப்படவில்லை. தற்போதைக்கு அரசின் முடிவு தெளிவாக இருக்கிறது. ஆலை மூடப்பட்டு தான் உள்ளது. ஆலையில் உள்ள எந்தவிதமான எந்திரமும் இயக்கப்படவில்லை. வேறு எந்தவிதமான அறிவிப்பும் அரசு சார்பில் வரவில்லை. ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது ஒரு பொய்யான தகவல்தான். இனிமேல் ஆலையை திறக்க வாய்ப்பு இல்லை. அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்று பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர ஆலையை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் ஆய்வு செய்து உள்ளோம். அதன்படி கிராமங்களுக்கு என்னென்ன தேவை என்ற அறிக்கை வந்து உள்ளது. குடிநீர், வடிகால் வசதி, தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் வாழைப்பயிர்களுக்காக வருகிற 4–ந் தேதி வரை அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போது ஸ்ரீவைகுண்டம் அணைக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடைசி குளமான கோரம்பள்ளம் குளம் வரை தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை தாமிரபரணி வடிநில கோட்டத்தில் 53 குளங்கள் உள்ளன. இதில் 38 குளங்களில் 25 முதல் 50 சதவீதம் தண்ணீரும், 10 குளங்களில் 25 சதவீதத்துக்கு குறைவான தண்ணீரும் உள்ளன. 5 குளங்களில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

அதேபோன்று மற்ற பகுதிகளில் குளம் தூர்வாரும் பணியும் நடந்து வருகிறது. 320 குளங்களில் தூர்வாரும் பணி நடக்கிறது. 3 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி மண் அள்ளப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்று உள்ளனர். குடிமராமத்து, நீர்வள, நிலவளத்திட்டத்திலும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.


Next Story