கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு: ஓய்வுபெற்ற ஆசிரியர் - தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் சாவு


கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு: ஓய்வுபெற்ற ஆசிரியர் - தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் சாவு
x
தினத்தந்தி 31 July 2018 4:30 AM IST (Updated: 31 July 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் தி.மு.க. பிரமுகர் உயிரிழந்தனர்.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 80). நாதஸ்வர கலைஞர். இவர் தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்து வந்தார். இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கணேசன் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.

நேற்றுமுன்தினம் தனது வீட்டில், டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை பற்றி ஒளிபரப்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து கொண்டு இருந்த கணேசன், கருணாநிதிக்கு உடல்நிலை பூரண நலம் பெற வேண்டும் என அழுது புலம்பி உள்ளார். இந்தநிலையில் இரவு 7 மணிக்கு திடீரென கணேசன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் கணேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 60). ஓய்வுபெற்ற ஆசிரியரான நல்லுசாமி தி.மு.க. தொண்டரும் ஆவார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த நல்லுசாமி மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். மேலும் அவர் கடந்த 3 நாட்களாக மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடந்துள்ளார். கருணாநிதி உடல்நிலை பற்றி டி.வி.யில் ஒளிபரப்பாகும் செய்திகளை பார்த்து கொண்டு, வருத்தத்துடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11 மணியளவில் கருணாநிதி உடல்நிலை பற்றி சமூக வலைதளங்களான முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப்களில் பரவிய வதந்திகளை கேள்விப்பட்டு நல்லுசாமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நாற்காலியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டார். நல்லுசாமியின் உடலுக்கு தி.மு.க.வின் பெரம்பலூர் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

Next Story