கருணாநிதி உடல் நலக்குறைவு: தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் சாவு


கருணாநிதி உடல் நலக்குறைவு: தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் சாவு
x
தினத்தந்தி 31 July 2018 3:30 AM IST (Updated: 31 July 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் மனம் உடைந்த தி.மு.க. பிரமுகர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவேங்கடம், 


நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பிச்சைத்தலைவன்பட்டியை சேர்ந்தவர் கோயில்பிள்ளை (வயது 75). முன்னாள் தி.மு.க. கிளை செயலாளரான இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜெயமாலினி (70). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் கோயில்பிள்ளை தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.


இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான செய்திகளை டி.வி.யில் பார்த்து கோயில்பிள்ளை மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இதனை தனது மனைவி ஜெயமாலினியிடமும் கூறி புலம்பியுள்ளார்.

நேற்று காலை அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு கோயில்பிள்ளை டீ குடிக்கச் சென்றார். அங்கு டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை குறித்த செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் மனம் உடைந்த கோயில்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. 

Next Story