காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல் மீட்பு மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்


காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல் மீட்பு மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 31 July 2018 4:30 AM IST (Updated: 31 July 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம்,

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கரைபுரண்டு ஓடுகிறது. திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. விழுப்புரம் மாவட்டம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது25). மெக்கானிக்கான இவரது கடையில் வேலை பார்த்து வந்தவர் சசி (19), அதே பகுதியை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் விக்னேஷ் (14) உள்பட 5 பேர் காரில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று விட்டு ஊருக்கு திரும்புகிற வழியில் திருச்சி திருவளர்ச்சோலை அருகே பொன்னுரங்கபுரத்தில் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற சசிக்குமார், சசி, விக்னேஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட அவருடன் வந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சசிக்குமார், சசி ஆகியோரை பிணமாக மீட்டனர். 2 பேரின் உடல்களும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விக்னேசை தொடர்ந்து தேடும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் விக்னேசை காவிரி ஆற்றில் அதே இடத்தில் பிணமாக மீட்டனர். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஸ்ரீரங்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்ததும் அவர்களது உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியானது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் திருச்சி காட்டூர் அருகே உள்ள கைலாஷ்நகரை சேர்ந்தவர் குணேந்திரன். தீயணைப்புத்துறை அதிகாரி. இவரது மகன் ஜெயின்ஸ்குணால் (19), பிளஸ்-2 படித்து முடித்த இவர் கடந்த 28-ந் தேதி தனது நண்பர்களான தனுஷ் (19), அன்சார் (19) ஆகியோருடன் உத்தமர்சீலி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றிருந்தார். இதில் குளிக்க ஆற்றுக்குள் இறங்கிய தனுஷ், ஜெயின்ஸ்குணால் ஆகியோர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் தனுசை மட்டும் உயிருடன் மீட்டனர். ஜெயின்ஸ்குணால் தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டார். இதனையறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறை மீட்புகுழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயன்ஸ்குணால் உடலை தேடினர். அன்று இரவு வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. மறுநாள் தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் 3-வது நாளான நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. இதற்கிடையில் கொள்ளிடம் ஆற்றில் ஜெயின்ஸ்குணால் அடித்துசெல்லப்பட்டு நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சற்று தொலைவில் நேற்று காலையில் அவர் பிணமாக தண்ணீரில் மிதந்தது கண்டறியப்பட்டது. இதனைக்கண்ட மீட்புகுழுவினர் அவரது உடலை மீட்டு ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு வந்திருந்த ஜெயின்ஸ்குணாலின் சகோதரர் ஜெயகாந்த் (21), நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை கண்டு கதறி அழுதது பார்த்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இதனையடுத்து கொள்ளிடம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜெயின்ஸ்குணால் அண்ணன் ஜெயகாந்த் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (32). மணல் மாட்டு வண்டி தொழிலாளியான இவரும் சக தொழிலாளர்களான ஸ்ரீரங்கம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஜோதிமுருகன் (19), கொள்ளிடம் சோதனை சாவடி பகுதியை சேர்ந்த சத்தியராஜ்(29) ஆகியோர் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் அருகே கொள்ளிடம் ஆற்றில் நேற்று மதியம் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்ற போது தண்ணீர் இழுத்து சென்றது. இதில் ஜோதிமுருகன், சத்தியராஜ் நீந்தி கரையேறினர். கருப்பையா தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கருப்பையாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை மாலை வரை மீட்க முடியவில்லை. அவரது கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை.

இதேபோல திருச்சி ஓடத்துறை காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை குளித்து கொண்டிருந்த போது பாலக்கரை பெல்ஸ்கிரவுண்டு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (21) தண்ணீரில் மூழ்கினார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவரை மீட்கமுடியவில்லை.

இந்த நிலையில் நேற்று பகலிலும் தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் மீட்கப்படவில்லை. அவரது கதியும் என்ன ஆனது? என்று தெரியவில்லை. தொடர்ந்து தேடி வருகின்றனர். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மூழ்கிய 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

Next Story