தூத்துக்குடியில் பரிதாபம் தண்ணீரில் மூழ்கி 4 வயது சிறுவன் சாவு


தூத்துக்குடியில் பரிதாபம் தண்ணீரில் மூழ்கி 4 வயது சிறுவன் சாவு
x
தினத்தந்தி 31 July 2018 3:30 AM IST (Updated: 31 July 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தண்ணீரில் மூழ்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் மகேசுவரி (வயது 30). இவர், தனது கணவர் செந்தில்குமார் (33) மற்றும் மகன்கள் குருநிஷாந்த் (4), வருண் (1) ஆகியோருடன் திருச்சியில் வசித்து வந்தார்.

குருநிஷாந்த் வாய்பேச முடியாதவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகேசுவரி தனது 2 மகன்களுடன் தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் குருநிஷாந்த் வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தான். திடீரென விளையாடிக் கொண்டு இருந்த அவனை காணவில்லை. இதனால் சிறுவனை தாய் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர்.

அப்போது வீட்டின் பின்னால் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டிரம்மில் முக்கால் பகுதி தண்ணீர் நிரம்பி இருந்தது. அந்த டிரம்மின் உள்ளே தண்ணீரில் மூழ்கிய நிலையில் சிறுவன் குருநிஷாந்த் கிடந்தான். அதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story