30 நாட்களாக முழு கொள்ளளவு நீர்மட்டம் குறையாமல் சோலையார் அணை: மின் உற்பத்திக்கு பிறகு பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது


30 நாட்களாக முழு கொள்ளளவு நீர்மட்டம் குறையாமல் சோலையார் அணை: மின் உற்பத்திக்கு பிறகு பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது
x
தினத்தந்தி 31 July 2018 3:45 AM IST (Updated: 31 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 30 நாட்களாக முழு கொள்ளளவு நீர்மட்டம் குறையாமல் சோலையார் அணை உள்ளது. அணையின் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு பிறகு பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது.

வால்பாறை,

வால்பாறையில் தென் மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 29–ந்தேதி முதல் பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்த போதும் கடந்த ஒரு வாரமாக மழை சற்று குறைந்து காணப்படுகிறது. கடந்த ஜூலை 1–ந்தேதி தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டிய சோலையார்அணையின் நீர்மட்டம் முதல் முறையாக 30–வது நாளாக முழு கொள்ளளவான 160 அடியை தாண்டிய நிலையிலேயே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சோலையார்அணை தனது முழு கொள்ளளவை எட்டும். ஆனால் ஓரிரு நாளில் அணையின் நீர் மட்டம் குறைந்துவிடும்.ஆனால் இந்த ஆண்டு வால்பாறை சுற்றுவட்டார பகுதி முழுவதும் தென் மேற்கு பருவமழை அதிகப்படியாக கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சோலையார்அணை தனது முழு கொள்ளளவு குறையாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் சோலையார்அணையின் மதகும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பரம்பிக்குளம் அணையும் விரைவாக நிறைவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தற்போதுசோலையார் மின்நிலையம் 1–ல் மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான பணி நடைபெற்று வருவதால் அவ்வப்போது மின்நிலையம் இயக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது. இதனால் ஒரே ஒரு மின்உற்பத்தி மோட்டார் மூலமாக மின்உற்பத்தி செய்யப்பட்டு மின் உற்பத்திக்குப்பின் வெளியாகும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. மேலும் வால்பாறையில் இருந்து கேரளமாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளிலும், கேரளாவிலும் கன மழை பெய்துவருவதால் கேரள சோலையார்அணை நிரம்பி விட்டது. இதனால் வால்பாறை சோலையார் மின்நிலையம் 2–ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடுவதும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் வால்பாறை சோலையார் அணையிலிருந்து பரம்பிக்குளம் அணைக்கு மட்டுமே தண்ணீர் சென்றுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வால்பாறை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் சோலையார்அணையில் 11 மி.மீ.மழையும், வால்பாறையில் 5 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 13 மி.மீ.மழையும், நீராரில் 7 மி.மீ. மழையும் பெய்துள்ளது. சோலையார்அணைக்கு வினாடிக்கு 2371.18 கன அடித்தண்ணீரும் வந்து வந்துகொண்டிருக்கிறது.


Next Story