அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணிகள் தீவிரம்: தலைமை செயலாளருடன் நாராயணசாமி ஆலோசனை
புதுவை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து சம்பளம் வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி,
புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி மசோதா தாக்கல் செய்ய கவர்னர் கிரண்பெடி அனுமதி அளிக்காத நிலையில் கடந்த 19–ந்தேதி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. நிதி மசோதா தாக்கல் செய்யப்படாததால் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையே மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து கவர்னர் கிரண்பெடி நிதி மசோதா தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். இந்த நிபந்தனை புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்க முடியும் என்ற சூழ்நிலையில் சட்டசபை கூட்டப்படவில்லை. சட்டசபையை கூட்டுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்துக்கான சம்பளம் மாதத்தின் இறுதிநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்காமல் போகும் நிலை உருவானது. இதற்கிடையே சட்டசபை கூட்டப்படாத நிலையில் பிற அரசுத்துறைகளில் உபரியாக உள்ள நிதியை கொண்டு சம்பளம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலாளர் கந்தவேலு, பட்ஜெட் அதிகாரி ரவிசங்கர், கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குனர் ரமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஜூலை மாதத்துக்கான சம்பளம் வழங்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுவை பட்ஜெட் அதிகாரி ரவிசங்கர் புதுவை கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள குறிப்பாணையில், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், கல்வி நிறுவன ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றை வழக்கம்போல் வழங்க சம்பள பட்டியலை அனுமதிக்கவேண்டும். அதற்கான நிதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.
மேலும் ஆகஸ்டு மாதம் 7–ந்தேதி வழங்குவதற்கான முதியோர் பென்ஷன் தொகையையும் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் அந்த குறிப்பாணையில் கூறியுள்ளார்.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியல் கணக்கு மற்றும் கருவூலத்துறைக்கு அனுப்பப்படும்.
இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்களின் வங்கிக்கணக்கில் சம்பள பணம் செலுத்தப்படும். இந்த பணிகள் இன்று நிறைவடைந்துவிட்டால் இன்று மாலையே சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் இல்லாவிட்டால் நாளை (புதன்கிழமை) சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.