சீருடை அணிவதிலும் விதிமுறையை கடைபிடிக்கும் அரசு பஸ் டிரைவர்


சீருடை அணிவதிலும் விதிமுறையை கடைபிடிக்கும் அரசு பஸ் டிரைவர்
x
தினத்தந்தி 31 July 2018 4:15 AM IST (Updated: 31 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக விதிமுறைகளை சீருடை அணிவதிலும் அரசு பஸ் டிரைவர் ஒருவர் கடைபிடித்து வருகிறார்.

மானாமதுரை,

அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு காக்கி நிற சீருடையும், 15வருட அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நீல நிற சீருடையும் வழங்கப்படுகிறது. மேலும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2செட் சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்படுகிறது. சீருடைக்கு தேவையான துணிகள் வழங்கப்படும் ஊழியர்கள் அதனை வேண்டிய அளவிற்கு தையல்கலைஞர்களிடம் கொடுத்து அவர்களின் அளவிற்கு ஏற்ப தைத்து கொள்வார்கள்.

போக்குவரத்து கழக ஊழியர்கள் வாகனங்களை இயக்கும் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பேட்ஜ், சட்டை பையில் பெயர் பேட்ஜ், சட்டை பட்டன்கள் போக்குவரத்து கழக அடையாளம் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நடைமுறையில் பல ஊழியர்கள் அதனை பின்பற்றுவது கிடையாது, காக்கி சட்டையும் பேன்ட்டும் அணிந்தே அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர்.

மேலும் தனியார் பஸ் டிரைவர்களும் இதையே அணிந்து பஸ்களை இயக்கி வருவதால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் தனியார் பஸ் எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் ராமேசுவரம் கிளை பணிமனையில் பணிபுரியும் மீனாட்சிசுந்தரம்(வயது42) என்பவர் தமிழக அரசின் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பஸ்சை இயக்கி வருகிறார்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அணியும் சீருடையை பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை முறையாக அணிந்து வாகனங்களை இயக்குகிறார். சக ஊழியர்கள் கேலி செய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர்களையும் இதே போல சீருடை அணிவதற்கு மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தி வருகிறார்.

இது குறித்து மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:– எனது தந்தையும் அரசு போக்குவரத்து கழக டிரைவராக இருந்து ஒரு விபத்தில் உயிரிழந்ததால் வாரிசு அடிப்படையில் இந்த பணி எனக்கு கிடைத்தது. இதையடுத்து கடந்த 2011–ம் ஆண்டு முதல் ராமேசுவரம் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் பணியில் சேர்ந்தேன். இன்று வரை போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து இதே சீருடைதான் அணிந்து பஸ்சை இயக்கி வருகிறேன்.

இதை மற்ற சக ஊழியர்கள் கேலி செய்தாலும் ஒரு சிலர் என்னை பின்தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். அரசு கூறிய சீருடையை அணிய எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. சக டிரைவர்கள் மத்தியில் இந்த சீருடையால் எனக்கு தனி மரியாதை கிடைத்துஉள்ளது. இதுவரை எந்த சங்கத்திலும் நான் இணையவில்லை. வாரிசு அடிப்படையில் பணியில் சேர்ந்ததால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு விசுவாசமாக நடக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story