நெல்லியாளம் நகராட்சியில் அரசு நிர்ணயம் செய்த சம்பளத்தை வழங்க வேண்டும்


நெல்லியாளம் நகராட்சியில் அரசு நிர்ணயம் செய்த சம்பளத்தை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 31 July 2018 4:15 AM IST (Updated: 31 July 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லியாளம் நகராட்சியில் அரசு நிர்ணயம் செய்த சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம், ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் அரசின் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை மனுக்களாக அளித்தனர். அதில் பந்தலூர் நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த துப்புரவு தொழிலாளர்கள் 25 பேர் அளித்த மனுவில் கூறி உள்ளதாவது:-

நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 50 தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தினக்கூலி ரூ.500 வழங்க வேண்டும். ஆனால் அந்த தொகையை எங்களுக்கு தருவது இல்லை. ரூ.300 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அரசு நிர்ணயித்துள்ள தொகையை சம்பளமாக தர வேண்டும் என சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் எங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை எந்த குறைபாடுகளும் இல்லாமல் செய்து வந்தோம்.

எங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை வைத்து தான் குடும்பம் நடத்தி வருகின்றோம். ஆனால் சம்பளமும் சரியாக தருவது இல்லை. இதை கேட்டதால் ஒப்பந்ததாரர் வேலை வழங்க மறுத்து வருகிறார். தற்போது 28 பேருக்கு வேலை வழங்கவில்லை. இதனால் வேலை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம். சாப்பாடு, குழந்தைகளின் கல்வி கட்டணத்துக்கு பணம் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறோம். எனவே தாங்கள் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு முறையாக வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து விட முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு வேலை கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆரி தலைமையில் நிர்வாகிகள் ஜெயக்குமார், செல்வராஜ், பரமசிவன் உள்பட ஊட்டி, எடக்காடு, மஞ்சூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனுக்கள் அளித்தனர். அதில், நாங்கள் கட்டிட தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றோம். தொழிலாளர் நல வாரியத்தில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை 30 நாட்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து காலத்தில் ஏற்படும் உயிரிழப்புக்கு ரூ.10 லட்சமும், இயற்கை மரணத்துக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த ஆவணப்படி 60 வயது பூர்த்தியான உடன் அரசாணை 36-ன்படி எந்தவித நிபந்தனையும் இன்றி ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 3 சென்ட் நிலம் மற்றும் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி தொகுதி மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் எஸ்.கே.ராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறி உள்ளதாவது:-

ஊட்டி பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது. மழைக்காலத்தில் பஸ் நிலையம் படகு இல்லம் போல காட்சி அளிக்கிறது. ஊட்டியில் பலமுறை நடந்த அரசு விழாக்களில் ஊட்டி, கூடலூர் பஸ் நிலைய விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நிதி வந்து சேர வில்லை. இதனால் பஸ் நிலையங்களை தற்காலிகமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இயக்கம் சார்பில் பொதுமக்களிடம் நிதி, பொருட்கள் திரட்டி தற்காலிகமாக பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story