பஞ்சாயத்து அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
கடையம் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி மேலாம்பூர் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடையம்,
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்தில் கருத்தபிள்ளையூர் கிராமம் உள்ளது. இங்குள்ள கென்னடி தெருவில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடனா ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்து கொண்டு செல்லபட்டு அங்குள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் முறையாக கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர். இதனையடுத்து மேலாம்பூர் பஞ்சாயத்து அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றும் நாங்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிபட்டு வருகிறோம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து கடையம் யூனியன் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘குடிநீர் ஆப்ரேட்டர் மருத்துவ ஓய்வில் உள்ளதால் புதிய ஆப்ரேட்டரை வைத்து தண்ணீர் விநியோகம் செய்து வருகிறோம். அனைத்து பகுதிளும் புதிய ஆபரேட்டருக்கு தெரியாததால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.