உறவுப்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 3 பேர் சரண்


உறவுப்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 3 பேர் சரண்
x
தினத்தந்தி 31 July 2018 3:45 AM IST (Updated: 31 July 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

உறவுப்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 3 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர். கடலூரில் சரண் அடைந்த 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் இருந்து பஞ்சப்பூர் செல்லும் வழியில் பசுமைப்பூங்காவுக்கு எதிரே முட்புதரில் கடந்த 24-ந் தேதி காலை ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இது குறித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பிணமாக கிடந்தவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சூரியபிரகாஷ்(வயது21) என்பதும், அவர் மீது போலீசில் ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருந்ததும், தெரியவந்தது.

மேலும் அவருடைய உறவினரான பெரம்பலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மனைவியுடன்(அண்ணி முறை உறவு) சூரியபிரகாஷ் செல்போனில் ஆபாசமாக பேசி செக்ஸ் தொல்லை கொடுத்ததும், அதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் சூரியபிரகாசை வெட்டிக்கொலை செய்ததாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக பெரம்பலூரை சேர்ந்த பிரகாஷ்(37), தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்ந்த ஆறுமுகம்(70) ஆகியோரை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலையில் தொடர்புடைய பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த ஆனந்த்(33), எளம்பலூர் மகாத்மாகாந்தி நகரை சேர்ந்த மணிகண்டன்(33), தூத்துக்குடி குமரன்நகரை சேர்ந்த ரவிக்குமார்(44), குளத்தூர் அண்ணாநகரை சேர்ந்த செந்தாமரைக்கண்ணன்(56) ஆகிய 4 பேர் கடந்த 26-ந் தேதி கடலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களது நீதிமன்ற காவல் இன்றுடன்(செவ்வாய்க்கிழமை) முடிகிறது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் சூரியபிரகாஷ் கொலையில் தேடப்பட்டு வந்த பெரம்பலூரை சேர்ந்த மாரீஸ்வரன், முத்து, பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேர் நேற்று திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-4 கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கட்டிட தொழிலாளி சூரியபிரகாஷ் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 9 பேர் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story