லாரிக்கு அடியில் மோட்டார் சைக்கிள் புகுந்தது; 2 வாலிபர்கள் பலி


லாரிக்கு அடியில் மோட்டார் சைக்கிள் புகுந்தது; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 31 July 2018 4:00 AM IST (Updated: 31 July 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே முன்னால் சென்ற லாரியை அதன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதால், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் லாரிக்கு அடியில் புகுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அருகே முன்னால் சென்ற லாரியை அதன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதால், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் லாரிக்கு அடியில் புகுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை ஆவடியை அடுத்த மோரை பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஜோதி சங்கர் என்பவருடைய மகன் பெருமாள் (வயது 22). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொப்பூர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் சரவணக்குமார் (35).

இவர்கள் 2 பேரும் திருவேற்காடு அடுத்த நும்பல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். சரவணக்குமார், சென்னை முகப்பேரில் தங்கி இருந்து, வேலைக்கு சென்று வந்தார்.

லாரிக்கு அடியில் புகுந்தது

பெருமாள், சரவணக்குமார் இருவரும் நேற்று மாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு வேலை விஷயமாக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பெருமாள் ஓட்டினார். அவருக்கு பின்னால் சரவணக்குமார் அமர்ந்து இருந்தார்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை அதன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், லாரியின் அடிபகுதியில் புகுந்தது.

லாரியின் பின்பகுதியில் வேகமாக வந்து மோதியதால் தூக்கி வீசப்பட்ட பெருமாள், சரவணக்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story