சரக்கு வேனில் விட்டு செல்லப்பட்ட பிறந்து 10 நாளே ஆன பெண் சிசு மீட்பு


சரக்கு வேனில் விட்டு செல்லப்பட்ட பிறந்து 10 நாளே ஆன பெண் சிசு மீட்பு
x
தினத்தந்தி 31 July 2018 4:15 AM IST (Updated: 31 July 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் சரக்கு வேனில் விட்டு செல்லப்பட்ட பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரில் குடியிருந்து வருபவர் தவுலத்பாஷா (வயது 50). இவர் தனக்கு சொந்தமான சரக்குவேனை அந்த பகுதியில் சாலையோரம் உள்ள காலி நிலத்தில் நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்று காலை அவர் சரக்கு வேனை எடுக்க சென்றார். அப்போது வேனின் பின்புறம் சரக்குகளை வைக்க கூடிய இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை கேட்ட தவுலத்பாஷா அங்கு சென்று பார்த்தார். அங்கு, பிறந்த 10 நாட்களே ஆன பெண் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த குழந்தையை மீட்டு, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்படைத்தனர். போலீசாரால் மீட்கப்பட்ட அந்த குழந்தை ஓசூரில் மத்திகிரி ரோட்டில் உள்ள ஆனந்த ஆசிரமத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

அந்த குழந்தையை யாரும் வீசி சென்றார்களா? அல்லது குழந்தை கடத்தல்காரர்கள் யாரேனும் குழந்தையை கடத்தி வந்து அங்கு விட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story