3 பேரை காதலித்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை


3 பேரை காதலித்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2018 4:58 AM IST (Updated: 31 July 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

ஒரே சமயத்தில் 3 வாலிபர்களை காதலித்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காதலிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் 3 பேரும் மாணவி வீட்டு முன் தகராறில் ஈடுபட்டதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரெட்டிகுண்டா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகள் சங்கீதா (வயது 19). இவர், சித்தூரில் உள்ள அரசு சாவித்திரியம்மாள் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 27-ந் தேதி வீட்டில் நடந்த தகராறு காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் சங்கீதாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சித்தூர் 4-வது போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் சேக்தவாளி மற்றும் போலீசார் சங்கீதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று ரெட்டிகுண்டா பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் சென்று பார்த்தபோது பிணமாக கிடந்தவர் வீட்டைவிட்டு வெளியேறிய கல்லூரி மாணவி சங்கீதா என்பது தெரியவந்தது. மாணவி சங்கீதா தான் படிக்கும் கல்லூரியை சேர்ந்த மாணவனையும், ராணுவத்தில் பணிபுரிபவரையும் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய 3 பேரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சங்கீதாவை காதலிப்பது குறித்து இந்த 3 பேரும் ஒருவரை ஒருவர் தகராறு செய்துகொள்வர். இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கீதா வீட்டுமுன்பு இவர்கள் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து சங்கீதாவின் பெற்றோருக்கு தெரியவே அவர்கள் சங்கீதாவை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதா விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கண்ட தகவல் சித்தூர் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story