நாட்டு மருந்து சாப்பிட்டதால் உடல் தோற்றம் சீர்குலைந்தது: வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


நாட்டு மருந்து சாப்பிட்டதால் உடல் தோற்றம் சீர்குலைந்தது: வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 31 July 2018 5:02 AM IST (Updated: 31 July 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

இடுப்பு எலும்பு முறிவு சரியாக நாட்டு மருந்து சாப்பிட்டதால் உடல் தோற்றம் சீர்குலைந்தது. இதற்கு காரணமான வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலாளி, குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், அணைக்கட்டு தாலுகா கருகாளி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 52) என்பவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தேன். அந்த சமயம் ஒரு நாள் திடீரென பாத்ரூமில் வழுக்கி விழுந்தேன். இதில் எனது ஒருபக்க இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இடுப்பு எலும்பு முறிந்ததால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒன்று பார்த்தேன். அதில், வாலாஜாவில் உள்ள நாட்டு வைத்திய சாலையில் மருந்து சாப்பிட்டால் எலும்பு முறிவு சரியாகி விடும் என தெரிவித்தனர்.

இதனை உண்மை என நம்பிய நான், கடந்த மாதம் அந்த நாட்டு வைத்திய சாலைக்கு சென்று வைத்தியரை நேரில் பார்த்தேன். அப்போது அவர், உடல் நலம் முழுவதும் குணமடைந்து, பழைய மாதிரி எழுந்து நடப்பதற்கு நாட்டு மருந்து தருவதாகவும், அதற்கு ரூ.60 ஆயிரம் செலவாகும் என்று கூறினார்.

இதையடுத்து எனது தங்கையின் நகைகளை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் வைத்தியரிடம் கொடுத்தேன். அதற்கு அவர் நாட்டு மருந்து மற்றும் எண்ணெய் வழங்கினார். அந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டதால் என் உடலின் தோற்றம் சீர்குலைந்து விட்டது, (உருவமே மாறிவிட்டது). உடல் நிலை பாதிப்பு மேலும் அதிகமானது. இதுகுறித்து வைத்தியரிடம் கேட்டதற்கு, என்னை அடிக்க வருகிறார்.

என்னிடம் ரூ.60 ஆயிரம் வாங்கிவிட்டு எனது உடல் தோற்றத்தை சீர்குலைத்த வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story