நாளை முதல் ஒத்துழையாமை போராட்டம் மராத்தா சமுதாயத்தினர் முடிவு


நாளை முதல் ஒத்துழையாமை போராட்டம் மராத்தா சமுதாயத்தினர் முடிவு
x
தினத்தந்தி 31 July 2018 5:20 AM IST (Updated: 31 July 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி நாளை முதல் ஒத்துழையாமை போராட்டம் நடத்த மராத்தா சமுதாயத்தினர் முடிவு செய்து உள்ளனர்.

மும்பை, 

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி நாளை முதல் ஒத்துழையாமை போராட்டம் நடத்த மராத்தா சமுதாயத்தினர் முடிவு செய்து உள்ளனர்.

மராட்டியத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமுதாயத்தினர் மாநில அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் பல கட்டமாக லட்சக்கணக்கில் மக்களை திரட்டி அமைதி பேரணிகளை நடத்தினார்கள்.

இதனால் எந்த பயனும் கிட்டாத நிலையில், மராத்தா சமுதாயத்தினரின் போராட்ட வடிவம் மாறியது. தங்களது கோரிக்கைக்காக அவர்கள் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

அரசு பஸ்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. மேலும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், கோரிக்கையை வென்றெடுப்பது தொடர்பாக லாத்தூரில் 22 மாவட்டங்களை சேர்ந்த மராத்தா அமைப்பினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, வருகிற 1-ந் தேதி(நாளை) முதல் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து உள்ளனர்.

இதுபற்றி மராத்தா அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

கோரிக்கைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும், 1-ந் தேதி முதல் தண்ணீர், மின்சார கட்டணம் மற்றும் வரிகளை செலுத்தாமல் ஒத்துழையாமை போாராட்டம் நடத்துவது, வருகிற 9-ந்தேதி மறியல் போராட்டங்கள் நடத்துவது என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இனி நாங்கள் கோரிக்கைக்காக அரசிடம் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story