குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை மின்னல் தாக்கி அண்ணா சிலை சேதம்


குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை மின்னல் தாக்கி அண்ணா சிலை சேதம்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:30 AM IST (Updated: 1 Aug 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குளச்சலில் மின்னல் தாக்கி அண்ணா சிலை சேதமடைந்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக தக்கலையில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை சற்று ஓய்ந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. மழையுடன் சில பகுதிகளில் காற்றும் வீசியதால் மின்தடை ஏற்பட்டது.

நேற்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். பகலில் மழை சிறிது நேரம் ஓய்ந்தது. பிற்பகல் 2 மணிக்கு பிறகு மீண்டும் பெய்யத் தொடங்கியது.

குளச்சலில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று, இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளச்சல் போலீஸ் நிலையம் அருகே அண்ணாசிலை உள்ளது. இது சிமெண்டு கலவையினால் ஆனது. நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னல் தாக்கி அண்ணாசிலை சேதம் அடைந்தது. அதாவது சிலையின் முகம் பகுதி உடைந்து கீழே விழுந்தது. நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் மின்னல் தாக்கி சிலை சேதம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் கிடைத்ததும் தி.மு.க. நகர பொறுப்பாளர் அப்துல்ரகீம் மற்றும் தொண்டர்கள் அங்கு சென்று சேதமடைந்த சிலையை பார்வையிட்டனர். தொடர்ந்து சேதமடைந்த அண்ணாசிலை துணியால் மூடப்பட்டது. அந்த சிலை விரைவில் சீரமைக்கப்படும் என்று தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

இதுபோல் நாகர்கோவில், மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், களியல், பத்துகாணி, களியக்காவிளை, கொல்லங்கோடு, தக்கலை போன்ற பகுதிகளிலும் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. தொடர் மழையால் ஆறு, குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மலையோர பகுதியில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டியது.

நாகர்கோவில் அருகே உள்ள குமரி அணை, சபரி அணை ஆகியவை நிரம்பி மறுகால் பாய்ந்தது. வடசேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக காம்பவுண்டு சுவர் மழையால் இடிந்து விழுந்தது. கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய சுற்றுச்சுவரும் மழையால் சரிந்தது. மணவாளக்குறிச்சி வள்ளியாற்று பாலத்தின் அருகே நின்ற மின்கம்பம் நேற்று முன்தினம் இரவு மழையால் சரிந்தது. இதனால், அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் மின்சாரத்துறை ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நாட்டி மின் இணைப்பை சரி செய்தனர்.

அருமனை அருகே குஞ்சாலுவிளையை சேர்ந்தவர் ராதா (வயது 55). நேற்று முன்தினம் இரவு ராதாவும் அவரது தாயாரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பெய்த மழையில் வீட்டின் அருகே நின்ற மரம் வேருடன் சாய்ந்து கூரை மீது விழுந்தது. இதில், வீட்டின் கூரை மற்றும் சுவர் சேதம் அடைந்தது. வீட்டில் உள்ளே இருந்த ராதாவும் அவரது தாயாரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று காலையில் மழையுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. படகுதுறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் 11 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, விவேகானந்தர் மண்டபத்துக்கு 3 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதேநேரத்தில், திருவள்ளுவர் சிலைக்கு நேற்று முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதுபோல், குளச்சல், கொல்லங்கோடு, நீரோடி, தூத்தூர், குறும்பனை போன்ற பகுதிகளிலும் கடல் சீற்றமாக இருந்தது.

விடிய, விடிய கனமழை பெய்ததில், அதிகபட்சமாக தக்கலையில் 15.3 செ.மீ. பதிவாகியிருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 496 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 656 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 314 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு 76 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 114 கன அடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 4 கன அடி தண்ணீரும் வருகிறது. இந்த அணைகள் மூடப்பட்டுள்ளன. மாம்பழத்துறையாறு அணைக்கு 73 கன அடி தண்ணீர் வருகிறது. அணை நிரம்பியிருப்பதால் வரத்து தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

Next Story