அரசு பள்ளியை திறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம்


அரசு பள்ளியை திறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2018 3:00 AM IST (Updated: 31 July 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி, அரசு பள்ளியை திறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜிலியம்பாறை,


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மோகன்தாஸ் என்பவர் உள்ளார்.

இவர், குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் என்பவரையும், பெண் ஊழியர் ஒருவரையும் தவறாக சித்தரித்து கல்வித்துறைக்கு புகார் அனுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில், மோகன்தாஸ் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள், பள்ளியை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் பள்ளிக்கு முறையாக வருவதில்லை என்றும், மாலையில் பள்ளி முடிவதற்கு முன்பே சென்று விடுவதாகவும், மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்துவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறினர்.

இதனால் அவரை இடமாற்றம் செய்யக்கோரி கோஷங் களை எழுப்பினர். போராட்டம் காரணமாக காலையில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து படித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தலைமை ஆசிரியர் மீதான புகாரை கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர்.

மேலும் மாணவ-மாணவிகளின் கல்வியை பாதிக்கும் வகையில் பள்ளியை திறக்கவிடாமல் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டம் காரணமாக காலை 8.30 மணிக்கு திறக்க வேண்டிய பள்ளி 10 மணிக்கு தான் திறக்கப்பட்டது. அதன்பிறகே வகுப்பறைக்குள் மாணவர்கள் சென்றனர். இதற்கிடையே மாவட்ட கல்வி அதிகாரி பிச்சைமுத்து, வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் ஆகியோர் தனித்தனியாக பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story