குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Aug 2018 3:00 AM IST (Updated: 1 Aug 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று ஆடிக்கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று ஆடிக்கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொடை விழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும். தசரா திருவிழாவுக்கு பெயர் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடந்தது.

நேற்று காலை 7 மணி, 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மகுட இசை, 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

பக்தர்கள் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, திசையன்விளை ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் தக்காருமான ரோஜாலி சுமதா, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story