சாதி பாகுபாடு பார்த்ததாக புகார்: தலைமை ஆசிரியை - பெற்றோர் மோதல்
மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததால் தலைமை ஆசிரியை, பெற்றோர் இடையே மோதல் ஏற்பட்டது. செருப்பால் தாக்கிய வீடியோ காட்சி ‘வாட்ஸ்-அப்’பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநத்தம்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 100 மாணவ-மாணவிகள் கல்வி பயிலுகிறார்கள். திட்டக்குடியில் வசித்து வரும் அனுசுயா என்பவர், தலைமை ஆசிரியையாக உள்ளார். மேலும் 3 ஆசிரியைகள் பணியாற்றுகிறார்கள். கடந்த 21-ந் தேதி பள்ளிக்கு வந்த ஒரு மாணவன் கிழிந்த சீருடை அணிந்திருந்தான். அந்த மாணவனை, தலைமை ஆசிரியை அனுசுயா, சாதி பெயரை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். சாதிபாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை மட்டும் வகுப்பறையில் தனியாகவும், மற்ற பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள் தனியாகவும் அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கூடம் முடிந்ததும், வகுப்பறையில் நடந்த இந்த சம்பவம் குறித்து மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதனால் அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று காலை 11 மணி அளவில் எழுத்தூர் கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஒன்று திரண்டு வந்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை அனுசுயாவை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். இதனால் தனது அறையில் இருந்து வெளியே வந்த அனுசுயாவிடம் பெற்றோர்கள், ஒரு பிரிவு மாணவர்களை குறி வைத்து அவர்களை சாதி பெயரை கூறி திட்டியது ஏன்?, அவர்களை வகுப்பறையில் தனியாக பிரித்து அமர வைத்தது ஏன்? என்று கேட்டனர். இதனால் பெற்றோருக்கும், தலைமை ஆசிரியை அனுசுயாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சில பெற்றோர் தகாத வார்த்தைகளால் திட்டியதால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை அனுசுயா, தன்னிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். உடனே அங்கு சூழ்ந்திருந்த மற்ற பெண்கள் ஒன்று சேர்ந்து, தலைமை ஆசிரியை அனுசுயாவை தாக்கினர். அப்போது பெண் ஒருவர், தலைமை ஆசிரியை அனுசுயாவை செருப்பால் சரமாரியாக தாக்கினார். மேலும் சிலர், தங்களது செருப்பை தலைமை ஆசிரியை நோக்கி வீசினர். பதிலுக்கு அனுசுயாவும் தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி, பெற்றோரை நோக்கி வீசினார். ஆனால் அந்த செருப்பு, அங்கு நின்றிருந்த ஒரு வாலிபர் மீது விழுந்தது. உடனே சக ஆசிரியை ஒருவர், இதில் தலையிட்டு தலைமை ஆசிரியை அனுசுயாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து வகுப்பறைக்குள் அழைத்து சென்றார். இந்த காட்சிகள் அனைத்தையும் பெண் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார். இந்த வீடியோ காட்சி தற்போது ‘வாட்ஸ்-அப்’பில் வேகமாக பரவுகிறது.
தலைமை ஆசிரியை தாக்கியதை கண்டித்தும், அவரை பணி நீக்கம் செய்யக்கோரியும் கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதற்கிடையில் சம்பவம் பற்றி அறிந்ததும் திட்டக்குடி தாசில்தார் சத்தியன் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர்(பொறுப்பு) செல்வராசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இது தொடர்பாக அனைவரிடமும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபடாமல் பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர். இதையடுத்து தாசில்தார் சத்தியனும், கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசுவும் கிராம மக்கள், பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியைகள், தலைமை ஆசிரியை என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். அப்போது கிராம மக்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தலைமை ஆசிரியை அனுசுயா, பள்ளி மாணவ-மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். ஒரு பிரிவு மாணவர்களின் சாதி பெயரை கூறி இப்படிதான் இருப்பீர்களா? உங்களால் நல்ல சீருடை, செருப்பு கூட அணிந்து வரமுடியாதா?. டி.சி.(மாற்றுச்சான்றிதழ்) வாங்கிவிட்டு போங்கள் என்று கூறியுள்ளார். இதை தட்டி கேட்டதால் அவர் செருப்பால் அடித்திருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விசாரணை முடிந்ததும் தாசில்தார் சத்தியன் மற்றும் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு ஆகியோர் அனுசுயாவிடம், தொடர்ந்து இந்த பள்ளிக்கூடத்தில் நீங்கள் பணிபுரிய கூடாது. கட்டாய விடுப்பு எடுத்துக்கொண்டு சென்று விடுங்கள். மாற்று ஆணை வந்த பிறகு, வேறொரு பள்ளிக்கூடத்துக்கு செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து தலைமை ஆசிரியை அனுசுயா அங்கிருந்து சென்று விட்டார். கிராம மக்களும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story