காரில் ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் போலீசில் சிக்கினார்


காரில் ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் போலீசில் சிக்கினார்
x
தினத்தந்தி 1 Aug 2018 3:30 AM IST (Updated: 1 Aug 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து வண்டலூருக்கு காரில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சோதனைச்சாவடிகளில் மாமூல் கொடுத்துவிட்டு கடத்தி வருவதாக அவர் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.

திண்டிவனம்,


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகே நேற்று மாலை மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புண்ணிய கோடி, தலைமை காவலர் குமரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் கண்ணாடிகளில் கருப்பு நிறத்தில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு இருந்தது. வாகன கண்ணாடிகளில் கருப்பு நிற ‘ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடாது என்று விதிமுறை உள்ளது. எனவே, அந்த காரை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் மடக்கி, டிரைவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் காரின் உள்ளே போலீசார் சோதனை செய்தனர். அப்போது, தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் புதுச்சேரியில் இருந்து அட்டைபெட்டிகளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

மொத்தம் 60 அட்டை பெட்டிகளில் 850 மதுபாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரித்த போது, அவர் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள சேர்ந்தநதத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜனார்த்தனன்(வயது 30) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் கடத்தல் குறித்து போலீசார் விசாரித்த போது, மதுபாட்டில்கள் கடத்துவதற்கு என்று ஒரு கும்பல் இருப்பதும், இதற்கென போலீசாருக்கு மாமூல் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார். போலீஸ் விசாரணையின் போது அவர் கூறியதாவது:-

எனது செல்போன் எண்ணுக்கு வழக்கம் போல் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில், மதுபாட்டில்கள் ஏற்றப்பட்ட நிலையில் சாவியுடன் ஒரு கார் புதுச்சேரியில் நிற்கிறது அதை எடுத்துக்கொண்டு காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் பகுதிக்கு வாருங்கள் என்றனர். அதன்பேரில் காரை எடுத்துக்கொண்டு வண்டலூர் நோக்கி சென்றேன். வழக்கமாக, அங்கு சென்ற பின்னர் கடத்தல் காரர்கள் கூறும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வந்துவிடுவேன். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரை எடுத்து செல்வார்கள். பின்னர், கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களில் உள்ள புதுச்சேரி மாநில ஸ்டிக்கரை நீக்கிவிட்டு, டாஸ்மாக் கடைகள் மூலம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை அவர்கள் விற்பனை செய்து விடுவார்கள். இவ்வாறு செய்தால், கடத்தல் கும்பல் மூலமாக எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வந்து சேரும்.

அந்த வகையில், வழக்கம் போல் கடத்தல் கும்பல் கூறியபடி, புதுச்சேரியில் இருந்து சேதாராப்பட்டு, மயிலம் கூட்டேரிப்பட்டு வழியாக தேசிய நெடுஞ்சாலையை வந்தடைந்து வண்டலூருக்கு சென்று கொண்டு இருந்தேன். ஆனால் இந்த முறை நான் போலீசில் சிக்கி கொண்டேன் என்று விசாரணையின் போது ஜனார்த்தனன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் இருந்து மயிலம் கூட்டேரிப்பட்டு பகுதிக்கு வரும் பகுதியில் பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடி, ஆரோவில் போலீஸ் நிலையம், விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ் நிலையம், அதை தொடர்ந்து பெரும்பாக்கத்தில் மதுவிலக்கு சோதனைச்சாவடி, மயிலத்தில் போலீஸ் நிலையம், கூட்டேரிப்பட்டில் ஒரு போலீஸ் மையம் அமைந்துள்ளது.

இந்த பகுதிகளில் எல்லாம் சோதனை நடைபெறும் போது, எப்படி இவைகளை கடந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறது என்று ஜனார்த்தனனிடம் போலீசார் மேற்கொண்டு விசாரித்தனர். அப்போது, கடத்தலுக்கு என்று அந்தந்த பகுதி போலீசாருக்கு மாமூல் வழங்கப்பட்டு வருவதாக அதிர்ச்சியான தகவலை அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ஜனார்த்தனனை மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story