பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து பலி
திண்டிவனத்தில் உள்ள அரசு பள்ளிகூடத்திற்கு செல்ல பஸ் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து பலியானான்.
திண்டிவனம்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அபினேஷ்(வயது 14). இவன் திண்டிவனத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ஒரு பள்ளிக் கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலை வழக்கம் போல், அபினேஷ் பள்ளிக்கு நெய்குப்பி கிராமத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்றான். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும், பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளான்.
திண்டிவனம் அரசு மருத்துவமனை அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, திடீரென அபினேஷ் தவறி கீழே விழுந்தான். இதை பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
உடன் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் ஓடி, சென்று பார்த்தனர். அப்போது அபினேஷ் தலையில் பலத்த காயமடைந்து, ரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்தான். அவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அபினேசை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த அபினேசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு பள்ளிக்கு சென்ற தங்கள் மகன் பிணமாக கிடப்பதை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இதனால் மருத்துவமனை வளாகமே சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காலை நேரங்களில் பள்ளிக்கூடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள், பஸ்சில் கூட்ட நெரிசல் இருந்தாலும் அதில் தான் சென்றாக வேண்டும். அந்தவகையில் தான் ‘படியில் பயணம்-நொடியில் மரணம்’ என்று தெரிந்தும் கூட அவர்கள் பயணிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
அதனால் தான் படிக்கட்டு பயணம் அபினேசின் உயிரை பறித்துவிட்டது. இதுபோன்ற நிலை இனியும் ஏற்படாமல் இருக்க காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் நலனுக்காக கிராமப்புற பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story